செறுமனத்தார் பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப - பழமொழி நானூறு 165

நேரிசை வெண்பா

மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார்
பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப
ஆயிரம் காக்கைக்கோர் கல். 165

- பழமொழி நானூறு

பொருளுரை:

குற்றமுடைய மனத்தனல்லாத மனதையும், சிறந்த வேற்றுமைத் துணை நலங்களையும் உடைய அரசன் யாவரிடத்தும் பொருந்திய அன்புடைய மனத்தனாகி ஒழுகின்,

வெல்லும் மனதுடைய அரசர்கள் வேண்டிய அளவு முகவுரை கூறிப் படையைத் திரட்டினால் அப்படைகள் என்ன செய்யும்?

ஆயிரம் காக்கைகளை ஓட்டுவதற்கு இட்ட ஒரு கல்லைப்போல அவர் தோன்றிய துணையானே பறந்து செல்வர்.

கருத்து

அரசர்கள் அன்பு ஒன்றே கொண்டு மறத்தை வெல்லலாம்.

விளக்கம்:

அல்லாத வேந்தன், நலத்த வேந்தன் எனத் தனித்தனி கூட்டுக.

துணை இருவகைப்படும்; அல்லாத என்றமையால் அறிவுடைமை, நீதி நூல்வழி ஒழுகல் முதலிய வுடைய மனத்தான் என்பது பெறப்படும். இஃது ஒற்றுமைத் துணை.

மா நலம் என்றமையான் படை, பொருள் முதலிய வேற்றுமைத் துணை உடையான் என்பது பெறப்படும்.

'செறும் மனத்தார்' என்றது, அன்புடையனாதலின் யாவரும் பகைமையின்றி ஒழுகுதலை அறிந்து அழுக்காறுற்று வெல்ல நினைக்கும் அரசர் என்றவாறு.

பாயிரம் என்றது, துணைசெய்வோர்க்குத் தாம் பின்னர்ச் செய்வதாக உறுதி கூறும் உரையை.

'தொக்கால்' என்றமையின் அவர் அன்புடைமை அறிந்த துணை செய்வோர் தொகார் என்பதாம்.

என் செய்ப என்றது முற்சேறலையா? பிற் சேறலையா என்று வினாவியவாறாம். அப்படைகள் சேர்தல் இல்லை. ஒருகால் சேர்ந்தாலும் அவரைக் கண்டு நாணி பிற்சேரும் என்பதாம்.

'அறத்திற்கே அன்புசார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை'என்பதே இது.

'ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-22, 10:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே