41ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 41
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்


நமது உடலுக்கு ஐந்து விதமான உறைகள் போன்று பஞ்ச கோசங்கள் அமைந்துள்ளன. பிராணனும், பலமும் அடங்கி இருப்பது பிராணமய கோசம் ஆகும். அந்த பிராணமய பலத்தினால் தோன்றுவது மனோன்மய கோசம் ஆகும். விஞ்ஞானம் மூலம் மனதில் தோன்றுவதுதான் விஞ்ஞானமய கோசம் ஆகும். அந்த விஞ்ஞானத்தினால் தோன்றியிருப்பதுதான் ஆனந்தமய கோசம் ஆகும். அன்னமய கோசம் என்பது அன்னத்தின் (உணவின்) காரணமாக ஏற்படுவது அன்னமய கோசம் ஆகும்.

பஞ்ச கோசம் என்பது மனிதனிடம் உள்ள ஐந்து உடல்களா? இன்று யோகம் கற்பிக்கும் பலரும் பஞ்ச கோசம் என்பது மனிதனை சுற்றி உள்ள நுண்மையான ஐந்து உடல்கள் என்று பலவாறு கூறி வருகிறார்கள். கோசம் என்பதற்கு உடல் என்பது பொருள் இல்லை. கோசம் என்றால் உடலுக்கு உறை போன்று என்று பொருள் கூறிவருவது ஓரளவு சரியானது ஆகும். கோசம் என்றால் பொக்கிஷம் அல்லது புதையல் என்று பொருள். மனிதனில் இருக்கும் பிராணசக்தி புதைந்து கிடக்கும் இடம்தான் ஐந்து உடல்கள் அடங்கியது என்பது பஞ்சகோசங்கள் ஆகும். பஞ்சகோசங்களைப் பற்றி அறிய வேண்டுமானால் ஆன்மீக வழியில் சென்று அறிந்து கொள்ளலாம்.

மனிதனது தேவைக்கு மிகுதியாக உள்ள பிராணன் உடலில் சேர்ந்தால் அது அன்னமய கோசம். அது பிராணனில் சேர்ந்தால் பிராணமய கோசம், புத்தியில் சேர்ந்தால் விஞ்ஞானமய கோசம், மனதில் சேர்ந்தால் மனோமயகோசம், ஆத்மாவில் சேர்ந்தால் ஆனந்தமய கோசம். இது ஒருமனிதன் எவ்வளவு பிராணனை, எங்கு சேர்க்கிறான் என்பதை ஆன்மீக வழியில் பயிற்சி சாதனைகள் மூலம்தான் அறியமுடியும். இது சாதாரண மனிதனுக்கு இயற்கை நிர்ணயித்தவாறும், ஆன்ம மன பரிணாமங்களுக்கு ஏற்றவாறு அவனது கோச நிலை இருக்கும். மனிதன் கோசநிலையை யோக, தந்திர ஆன்மீக சாதனைகள் மூலம் அதிகரித்துக்கொள்ள முடியும் என்று ஞானிகள் கூறுகின்றனர்.

ஐந்து கோசங்களும் ஒன்றிலிருந்து ஒன்றும் மற்றும் ஒன்றை ஒன்று சார்ந்தும் இருக்கிறது. ஐந்து கோசங்களைப் பற்றி எளிதாகக் கூறவேண்டுமானால் நமது உடலை மூச்சு இயக்குகிறது. நமது உடல் இயங்குவதற்கு காற்று அல்லது மூச்சு அவசியம் தேவைபடுகிறது. அந்த மூச்சை உணர்வுஉடல் இயக்குகிறது. நமக்குள்ளே நாசியின் வழியே காற்று உள்ளே வெளியே செல்வதை கவனித்துப் பார்த்தால் நன்கு உணர்வதற்கு முடியும். உணர்வுஉடலை நமது அறிவு உடல் இயக்குகிறது. உணர்வு நிலையை அல்லது உணர்வு உடலை நாம் உணர வேண்டும் என்றால் ஆன்மீக வழியில் பயிற்சி மற்றும் அறிவு இருந்தால்தான் உணர முடியும்.

இதனை ஆறு அறிவு படைத்த மனிதர்கள் மட்டும்தான் உணர முடியும். மிருகங்கள் பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களால் உணர்வுகளை உணர முடியாது. காரணம் அவைகளுக்கு ஆறாவது அறிவு என்பது கிடையாது. எடுத்துக்காட்டாக ஒரு பசுவிடம் சென்று உனக்கு மூச்சுக்காற்று இருப்பதால்தான் நீ புல்லைத் தின்ன முடிகிறது. உன்னால் நடந்து செல்ல முடிகிறது. உனக்கு மூச்சுக் காற்று இல்லை என்றால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிப்பாருங்கள். அதற்கு காது கேட்டாலும் அதனால் உணர்ந்து கொள்ள முடியாது. ஏனென்றால் மனிதர்களைப்போன்று புரிந்து கொள்ளக்கூடிய அறிவு அதனிடம் இல்லை.

அறிவு உடலை அதற்கு மேல் உள்ள இன்ப உடல் இயக்குகிறது. இன்ப உடலை அதற்கு மேல் உள்ள மறுமை இன்ப உடல் இயக்குகிறது. மறுமை இன்ப உடலை அதற்கு மேலிருக்கின்ற பேரின்ப உடல் இயக்குகிறது. அந்த பேரின்ப உடல் எல்லா உடலையும் இயக்குகின்ற திருவருள் ஆகும். எல்லா உயிர்களையும் இயக்கும் அருள் நிலை அன்பு நிலையாகும். ஆண் பெண் இருவரின் இனம் புரியாத இன்ப உறவுகளினால் கருவில் சிசு உருவாகி, இவ்வுலகில் குழந்தையாக பிறக்கிறது. அக்குழந்தைக்கு பால், அன்னம் கொடுத்து ஸ்தூல உடல் வளர்ச்சி பெறுகிறது. அக்குழந்தை உண்ணும் உணவுக்கு தகுந்தவாறு உடல் அமைப்பைப் பெறுகிறது. அதுவே அன்னமய கோசம் எனப்படுகிறது.

பிராணமய கோசம் என்பது காற்றுடம்பு ஆகும். இதற்கு உருவம் கிடையாது. அது உடலில் எல்லா இடத்திலும் காற்றாக மூச்சாக இருந்து இயக்குகிறது. இந்த அன்னமய கோசத்திலிருந்து பிராணமய கோசமாகி பரமாத்மாவின் உள்ள சத், சித் ஆனந்தம் ஆகிறான். நாம் நாள்தோறும் மற்றவர்களிடம் அடிக்கடி பேசக்கூடிய ‘நான்’ என்பது நமது உடலையும் குறிக்கும். நம் கண்ணுக்குத்தெரியாத உணரக்கூடியதுமான ஆன்மாவையும் குறிக்கும். இந்த ‘நான்’ என்ற சொல்லை குறித்து இரண்டு வகைகளாக இருக்கிறது என்பது பற்றி திருமூலர் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.

ஒருவகை ‘நான்’ என்ற சொல் பசி, சாமர்த்தியம், வீரம், தீரம் போன்றவைகளாக செயல்படுகிறது. மற்றுமொரு ‘நான்’ என்ற சொல் என்பது வாயாடி, ஊமை, குருடன் முடவன் போன்றவையாகவும் செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒருவனிடம் “நீ ஏன் சோர்ந்துபோய் இருக்கிறாய்’ என்று கேட்டால் நான் பசியுடன் இருக்கிறேன் அதனால் சோர்ந்து இருக்கிறேன் என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். இந்த இடத்தில் ‘நான்’ என்ற சொல் பசியை முன்னிலைப்படுத்தி அவன் கூறுகிறான்.

இதைப்போன்று மற்றவைகளைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு வகை ‘நான்’ என்ற சொல்லை அறியமுடியும். இவை பிராணமய கோசத்தின் குணமாகிறது. இந்த பிராணமய கோசம் நமது கண் காது போன்ற ஐம்பொறிகளுக்கு தேவையான பலத்தினைக் கொடுக்கிறது. இந்த கோசம் நல்லவழிகளிலோ அல்லது தீமை தரக்கூடிய வழிகளிலோ மனிதனை நடத்திச் செல்கின்றது. இந்த உடல், மனம் சார்ந்த பஞ்சேந்திரியங்களுடன் சேர்ந்து விருப்பு வெறுப்பு என்ற தத்துவ ஓசைகளை கேட்டும் மனோன்மய கோசமாகின்றது. பிராணமய கோசத்திற்கு வேறாக இருந்து கொண்டு செயல்படும்போது காமம், கோபம், ‘நான்’ ‘எனது’ என்பன போன்ற ஆணவ விகாரங்களை உடையதாக இருக்கிறது.

மனதிற்கும் பிராணனிற்கும் பெரிய நீண்ட தொடர்பு எதுவும் இல்லை. ஆனால் பிராணனை பற்றி நன்கு புரிந்துகொண்டு விட்டால் உணர்ந்து கொண்டால் நமது மனம் நன்றாக இருக்கும். நாம் மனக்குழப்பத்துடன் இருக்கும்போது ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாக தியானத்தினை மேற்கொண்டால் நமக்கு மனக்குழப்பம் நீங்கி ஓரளவு மனம் அமைதி அடைகிறது. தியானம் என்பது நாம் உள்ளே வெளியே விடும் மூச்சுக் காற்றைக் கவனித்தாலே போதுமானது என்று ஒரு சில ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலை பெறுவதற்கு ஆன்மிகம் பல வழிகளில் துணை புரிகிறது. (அமைதி தொடரும்)
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (18-Aug-22, 10:38 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே