எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கு மாறு - பழமொழி நானூறு 167

நேரிசை வெண்பா

உடுக்கை மருந்துறையுள் உண்டியோ டின்ன
கொடுத்துக் குறைதீர்த்த லாற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை யென்ப எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கு மாறு. 167

- பழமொழி நானூறு

பொருளுரை:

உடையும் மருந்தும் உறையுளும் உணவோடு இவற்றை யளித்து அவர் குறையை நீக்குதலைச் செய்து இனிய சொற்களைக் கூறாமை,

ஒருவர் உணவின் பொருட்டு எருமையைக் கொன்று அதனைச் சமைத்தற்கு உரிய காயம் வாங்குதற்கு லோபிக்குமாற்றை ஒக்கும் என்று சொல்வார்கள்.

கருத்து:

கொடைக்கு இன்சொல் இன்றியமையாது வேண்டப்படுவது ஒன்றாகும்.

விளக்கம்:

மருந்து என்பதும் சொல்லப்படுவதால் இது கொடுத்தலும் சிறந்த அறமாம்.

ஆற்றிவிடுத்து - ஒருசொல் நீர்மைத்து.

உணவின் பொருட்டு எருமையை வாங்கி அதனைக் கொன்று, காயம் வாங்குதற் பொருட்டு லோபித் தொழிவார் அதன் சுவையை முற்றும் அடையாதது போல,

வறியார்க்கு வேண்டுவன, இன்சொல் இன்றி ஈவார் அதனால் வரும் இன்பத்தை முற்றும் அடையாது ஒழிவர்.

’எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கு மாறு‘ என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Aug-22, 11:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே