மறுமையறஞ் செய்யார் மாமூட ராவர் – அறநெறிச்சாரம் 155
நேரிசை வெண்பா
அம்மைத்தாஞ் செய்த அறத்தின் வருபயனை
இம்மைத்துய்த்(து) இன்புறா நின்றவர் - உம்மைக்(கு)
அறம்செய்யா(து) ஐம்புலனும் ஆற்றுதல் நல்லாக்
கறந்துண்டஃ(து) ஓம்பாமை யாம். 155
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
முற்பிறப்பில் தாம் செய்த அறங் காரணமாக வரும் இன்பத்தை இப்பிறப்பில் நுகர்ந்து மகிழ்கின்றவர்கள்,
மறுமையின்பத்தின் பொருட்டு அறத்தினைச் செய்யாமல் ஐம்பொறிகளாலும் நுகரப்படு மின்பங்களை நுகர்ந்துகொண்டு வாளா இருத்தல்,
நல்ல பசுவினை பாலைக் கறந்து மகிழ்ச்சியோடு பருகி பின் பசுவை உணவிட்டுக் காவாதிருத்தல் போலாம்.