வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் – நாலடியார் 277
நேரிசை வெண்பா
வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல 277
- ஈயாமை, நாலடியார்
பொருளுரை:
பிறர்க்கொன்று உதவாத செல்வர்களை விட அச்செல்வமில்லாத வறுமையாளர்களே பிழைத்துக் கொண்டவர்கள்;
ஏனென்றால், பொருளை வீணே தொகுத்து வைத்துப் பின் ஒருங்கே இழந்து போனார் என்று உலகவராற் பழிக்கப்படுதலினின்று அவர்கள் பிழைத்துக் கொண்டனர்;
வருந்தித் தேடிய பொருளைப் பின் காத்தலினின்றுந் தப்பினர்; அதனைப் புதைத்து வைக்கும் பொருட்டுக் குழி தோண்டுதலுந் தப்பினர்; தம்முடைய கைகள் நோவும்படி அதனைக் கட்டிச் சேமித்தலுந் தப்பினர்; இன்னும் இவ்வாறு அவர்கள் தப்பிக்கொண்ட வகைகள் பலவாகும்.
கருத்து:
ஈயாத செல்வர்க்கு இன்னல் பல உண்டு.
விளக்கம்:
ஈயாமையாற் பயனில்லாமையோடு இன்னலும் பல உள்ளதால், செல்வத்தின் இன்னலை எய்தா வறியவர் அவ் ஈயாதவரினும் உய்ந்தவராவரென்றார். உய்ந்தாரென்று பலமுறை வந்தது வற்புறுத்தல் நோக்கி என்க!