திருவலிவலம் பதிகம் 1

முதல் திருமுறையில் 123 வது தலமாக ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருவலிவலம் பதிகத்தில் 1 ஆம் பாடல்.
கலிவிருத்தம்
கூவிளம் விளம் விளம் விளம்)

பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை யெதிர்விழி உமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே. 1

பொழிப்புரை:

மணம் கமழும் மலர்களையும், அவற்றில் தேனுண்ணும் வண்டுகளையும் உடைய பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவனே, மலர்கள் அணிந்த சுருண்ட கூந்தலையும், வரிந்து கட்டப்பெற்ற வில்போன்ற புருவமும், நெற்றியும், செலுத்துதற்கு உரிய கணை, மருண்ட மான் ஆகியன போன்ற கண்களையும் உடைய உமையம்மையோடு கூடிய திருமேனியை உடையவன் ஆகும்.

பூ இயல் புரி குழல் - பூக்களையணிந்த பின்னப்பெற்ற சுருண்ட கூந்தல்

வரிசிலை – வரிந்து கட்டப்பட்ட வில்

ஏவு இயல் கணை – செலுத்தப்பட்ட பாணம். பெண்ணின் கண்ணும், செலுத்தப்பட்ட பாணமும் ஒப்பாக்கி தைத்திடும் இயல்பு கூறப்படுகிறது.

பிணை – பெண்மானுக்கு நிகரான அழகிய மருண்ட கண்களையுடையவள்.

மா இயல் பொழில் - மாமரங்கள் செறிந்த சோலை. வண்டுகள் நிறைந்த சோலை.

குறிப்பு:

திருவலிவலம்:

இறைவர் பெயர் இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்,

இறைவியின் பெயர் வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி,

தல மரம் - புன்னை, தீர்த்தம் - சங்கர தீர்த்தம்.

தல வரலாறு: வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.

சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

சிறப்புகள்: வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.

இது கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்.

தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.

கோவிலுக்குச் செல்லும் வழி:

தமிழ் நாட்டில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம்.

திருவாரூரிலிருந்து 10 கி. மீ. தொலைவிலுள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் வரலாம்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Aug-22, 12:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே