திருவலிவலம் பதிகம் 2

முதல் திருமுறையில் 123 வது தலமாக ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருவலிவலம் பதிகத்தில் 2 ஆம் பாடல்.
கலிவிருத்தம்
கூவிளம் விளம் விளம் விளம்)

இட்டம தமர்பொடி யிசைதலி னசைபெறு
பட்டவிர் பவளநன் மணியென வணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே. 2

பொழிப்புரை:

தேனோடு கூடிய மணம் கமழ்கின்ற மலர்கள் விளங்கும் அழகிய சோலைகள் நிறைந்த வலிவலத்தில் உறையும் இறைவனே, விருப்பத்தோடு அணியப் பெற்ற திருநீறு பொருந்தி இருத்தலால், விருப்புடன் பட்டோடு விளங்கும் நல்ல பவளமணி போல் அழகு பெற்று ஒளி வீசும் திருமேனியை உடையவன் ஆகும்.

குறிப்புரை:

செம்மேனியில் திருநீறு அணியப் பெற்றதால் பட்டோடு விளங்குகின்ற பவளமணி போல ஒளி விடுகின்ற அழகிய உருவத்தை உடையவர் இந்நகர் இறைவன் ஆகும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

இட்டம் - விருப்பம். நசை - விருப்பம்.

பட்டு அவிர் பவள நன்மணி - பட்டோடு விளங்குகின்ற தேர்ந்த பவளமணி.

குறிப்பு:

திருவலிவலம்:

இறைவர் பெயர் இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்,

இறைவியின் பெயர் வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி,

தல மரம் - புன்னை, தீர்த்தம் - சங்கர தீர்த்தம்.

தல வரலாறு: வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.

சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

சிறப்புகள்: வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.

இது கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்.

தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.

கோவிலுக்குச் செல்லும் வழி:

தமிழ் நாட்டில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம்.

திருவாரூரிலிருந்து 10-கி. மீ. தொலைவிலுள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் வரலாம்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Aug-22, 12:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே