குறுமக்கள் காவு நடல் - பழமொழி நானூறு 172

இன்னிசை வெண்பா

உறுமக்க ளாக ஒருவரை நாட்டிப்
பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே யொழிதல்
சிறுமைக்(கு) அமைந்ததோர் செய்கை அதுவே
குறுமக்கள் காவு நடல். 172

- பழமொழி நானூறு

பொருளுரை:

வேலைக்குத் தகுதியானவராக ஒருவரை வேலையில் இருக்கச் செய்து, அவர் செய்த குற்றம் உண்டென்னும் சொல் இன்றியே அவரை வேலையினின்றும் தவிர்த்தொழிதல் கீழ்மக்களுக்குப் பொருந்திய செயலாம். அச்செயல் பிள்ளைகள் சோலை வைத்து வளர்ப்பதை ஒக்கும்.

கருத்து:

கீழ்மக்கள் தொடங்கிய செயல் முடிவு பெறாது.

விளக்கம்:

சோலை வைக்கப் புகுந்த சிறுவர்கள் செடிகளை நட்ட இடத்தில் தரிக்க வொட்டாராதலால் சோலை உண்டாதலில்லை.

அதுபோல, கீழ்மக்களும் அடிக்கடி செயலாற்றுவோரை மாற்றுந் தொழில் உடையராதலின், அவர் நினைத்த காரியம் முடிவு பெறுவதில்லை.

சிறுமைக் குணம் மிகுதியும் உடையவர்கள் கீழ்மக்களாதலால் சிறுமை எனப்பட்டனர்.

'குறுமக்கள் காவு நடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Aug-22, 9:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே