நம்முடைய கர்மவினைகள் நாம் செய்தவைதானா

நாம் வாழும் இந்த உலகம் வெறும் கலிகாலத்தில் மட்டும் சிக்கிக்கொண்டு
அவதிப்படவில்லை. அதைவிடவும் கொடுமையான கடவுள் இல்லாமல்
அனாதையாக விடப்பட்ட உலகமாகவும் பரிதாபமாக திகழ்கிறது.
எவ்வளவோ அறிஞர்கள், ஞானிகள், முனிகள், தவசீலர்கள் வாழ்ந்து சென்ற
பூமி என்று சொல்லப்படும் இந்த உலகில், இந்த கால கட்டத்தில் எவ்வளவு
நல்ல மனிதர்களை பார்க்கமுடிகிறது? மிக மிக மிக குறைவே. இந்த
மிகக்குறைந்த நல்லவர்களில் நீங்களும் நானும் ஒன்றா என்றால்,
அதுகூடசந்தேகமே. நல்ல மனிதர்கள் என்று நான் கூறுவது, வெறும்
கொள்கைகள் பேட்ஜ் தாங்கிய வீரர்களை இல்லை. நல்லது செய்ய
தன்னையும் தன் உயிரையும் கூட தியாகம் செய்யும் அபூர்வமான மனம்
படைத்த அப்பாவி மக்களைத்தான் நான் குறிப்பிடுகிறேன். இந்த வகையில்
நீங்களும் நானும் இப்படி பட்ட நல்லமனிதர்களில் ஒருவராக
இருக்கமுடியும் என்பது மிகவும் கேள்விக்குரிய விஷயம்தான். ஒருவேளை
நீங்கள் யாரேனும் இருப்பின் அவர்களை நான் மனதால் தலைகுனிந்து
வணங்குகிறேன். விஞ்ஞான ரீதியாக , ஒன்றும் இல்லாத ஒன்றிலிருந்து
திடீரென்று வெடித்து தோன்றி, லட்சலட்ச வருடங்கள் மனித சுவடே இல்லாத
உலகமாகத்தானே இது இருந்திருக்கிறது. அப்படி என்றால், யார் இந்த மனித
உயிரை முதன் முதலில் படைத்தது? மனிதன் தானாகவே உருவான சுயம்பு
என்றால் அதையும் நம்பமுடியவில்லை. இரண்டு உடல்கள், அதுவும் ஒரு
ஆண் ஒரு பெண் இல்லாவிடில், எப்படி இன்னொரு உயிர் உருவாக முடியும்?
உருவம் இல்லாத ஒரு சக்தி, இரு மனிதர்கள் இணைந்து படைக்கப்பட
வேண்டிய ஒரு உயிரை எப்படி உருவாக்கியது? அப்படி என்றால் ஒன்றுமே
இல்லை என்ற ஒன்று , ஒன்றுமட்டும் இன்றி இரண்டா? அப்படி என்றால்
ஒன்றும் இல்லாத அந்த இரண்டில் ஒன்று ஆணா , இன்னொன்று பெண்ணா?
மாயமே , மர்மமே, தலையை பிய்த்துக்கொள்ளும் தலைபோகும் விஷயமே.

சரி , இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த பிரபஞ்சம் ஏன் படைக்கப்பட்டது?
ஆகாயம், நட்சத்திர மண்டலம், சூரியன் சந்திரன் இவை எல்லாம் ஏன்
உருவாக்கப்பட்டது? ஏன், இவை எல்லாம் உருவாக மூல காரணமாயிருக்கும்,
வரும் உணரவே முடியாத அந்த சக்தி, நம் எவருடைய கண்களுக்கும்
தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கிறது. காற்றுகூடத்தான் கண்ணுக்கு
தெரியாமல் இருக்கிறது. ஆனால் நம்மால் உணரமுடிகிறதே.
அப்படி,காற்றைப்போல நாம் உணரும்வண்ணம் இருந்தாலும் , சரி கடவுள்
இதோ வருகிறார் போகிறார், நம்மை தொடுகிறார், இப்படி போன்ற உணர்வுகள்
கொண்டு நாம் கடவுளை அணுகமுடியும்.அதுவும் இல்லை இதுவும் இல்லை.
அப்படி என்றால் எப்படி நாம் கடவுள் இருக்கிறார், இருக்கிறது என்பதை உணர
முடியும்? விஞ்ஞானம் , கடவுள் என்ற ஒன்று வெறும் கற்பனையே, பௌதீக
ரீதியாக கடவுள் என்ற ஒன்று எதுவும் இல்லை என்று சொல்வதை நான்
உண்மையிலேயே மறுக்கமுடியுமா?

ஆனால் கடவுள் இல்லை என்று எல்லோருமே நம்பினால், பின்னர் இந்த
உலகம் எப்படி இருக்கும் என்பதைத்தான் நினைத்துக்கூட பார்க்கமுடியுமா?
அவரவர் தனக்கு தோன்றுவதை செய்து கொண்டிருப்பார்கள், செய்து
கொன்றிருப்பார்கள், ஒருவர் பலரின் மனதை வென்றிருப்பார், பலர் ஒருவரின்
இதயத்தில் குடிகொண்டிருப்பார்கள். வல்லவர்கள் நல்லவர்களை
விட்டுவைத்திருப்பார்களா? ஒழுக்கம் , தருமம், நீதி , நேர்மை, நியாயம், உண்மை
போன்ற பதங்களும் வார்த்தைகளும் உலகின் அகராதிகளில் இருந்திருக்குமா?
அந்த வகையில், கடவுள் என்ற சக்தி ஒன்று ஏதோ, நம் அகக்கண்களுக்கு
தெரியாவிடினும், கண்டிப்பாக இருக்கிறது, என்கிற எண்ணத்தின் விதையை
விதைத்தவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அப்படி உருவாக்கப்பட்ட
கடவுள் என்பது வெறும் கற்பனை, மூடநம்பிக்கை, பொய்புரட்டு என்று கடவுள்
நம்பிக்கை உள்ளவர்களை கேலிசெய்து சித்தரிக்கும் பல மனிதர்கள் அன்றும்
இன்றும் என்றும் எங்கும் இருக்கிறார்கள். இவர்களின் கூற்றுகளை
'நாஸ்திகர்கள் திமிர் பிடித்தவர்கள்' என்று கூறி ஓரம் கட்ட இயலுமா?

விதி , பூர்வஜென்ம கர்மவினைகள் என்னும்போது, இவ்வுலகில் முதன்
முதலில் பிறந்த மனிதனின் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தான் என்ன?
ஒருவினையும் இல்லாதிருப்பின், பின் ஏன் முதல் மனிதன் பிறக்கவேண்டும்?
அப்படி பிறந்த முதல் இரண்டு மனிதர்கள் என்ன செய்திருப்பார்கள்? அவர்கள்
ஒரு ஆணாகவும் இன்னொருவர் பெண்ணாகவும் இருந்திருப்பின், குழந்தை
பிறக்க வழிசெய்வதை தவிர வேறு எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை.
இயற்கையின் விதிப்படி, இந்த முதல் ஜோடி, அந்த காரியத்தில் ஈடுபட்டது,
கண்டிப்பாக குற்றம் என கருதப்படாத செயலாகத்தான் இருக்கவேண்டும்.
அந்த இருவருக்கும் இது நல்லது இது கெட்டது என்பதை யார் விளக்கியது?
யார் வகுத்தது? அப்படி வகுத்தவர்கள் கர்மவினைகள் எப்படி இருந்தது?
இவற்றை எல்லாம் யார் உணரமுடியும்? எப்படித்தான் உணருவது?

இன்றைய உலகில் நடக்கும் சம்பவங்கள் சாதாரணமானவை அல்லவே. ஒரு
புறம் ஆயிரமாயிரம் மனித மற்றும் விலங்குகள் உணவின்றி தினமும்
சாகின்றது. அதே நேரத்தில் சிலர் ஒவ்வொரு நாளும் கோடிகணக்கில் பணம்
சேர்க்கிறார்கள். ஒருபுறம் கொலை, கொள்ளை, இன்னொரு புறம் இன்பம்
கேளிக்கை. ஒரு புறம் பெண்களிடத்தில் வன்முறை, இன்னொரு புறம்
பெண்களே செய்யும் வன்முறைகள், ஆபாசம் மற்றும் போன்ற வேறு
பலவழிகளில் செய்யும் காரியங்கள். சமுதாய சந்திப்புகள் எனும்
போர்வையின் மறைவில் தான் எத்தனை வகையான ஆடல்கள், தேடல்கள்
கூடல்கள் மற்றும் ஊடல்கள்!

வேதம் கடவுளால் எழுதப்பட்டது என்றால், அது ஏன் உலகம் முழுவதும்
வியாபித்திருக்கவில்லை? இந்திய மண்ணில் மட்டும்தான் வேதம்
நடைமுறையில் இருந்ததா? தவிர இந்த காலகட்டத்தில் மக்களை நான்கு
வகை (வர்ணாஸ்ரம்) தொழில்களின் கீழ் பகுத்து வகுக்கமுடியுமா? இவருக்கு
எப்படி வாழவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதோ அப்படி வாழ இந்த
உலகம் மறுப்பு தெரிவிக்கவில்லையே. அப்படி ஒருவர் தனக்கு பிடித்த
தொழிலை செய்து தான் நினைப்பது போல சுதந்திரமாக வாழ்வதை நாம்
குறை அல்லது தவறு என்று தட்டி கேட்கமுடியுமா? மற்றவர்களுக்கு தீங்கு
விளைவிக்காமல் ஒருவர் பேச்சும் நடையும் இருப்பின் நாம் அத்தகைய
மக்களை எந்த வகையில் குறை கூற முடியும்? ஒருவரையோ , ஒரு
சமுதாயத்தினரையோ ஒரு மதத்தினரையோ, ஒரு இனத்தையோ, அவர்
மனம் புண்படும் விதமாக, அவர்களின் உடலுக்கு இழுக்கையும், தீங்கையும்
காயத்தையும் விளைவிப்பதாக இருக்குமானால் அதை தான் நான் இங்கு
தீங்கு என்று குறிப்பிடுகிறேன்.

இயற்கையின் சீற்றங்கள், உடலை தாக்கும் பயங்கரமான வியாதிகள், பிறந்த
உயிர்கள் இறந்தே தீரவேண்டும் போன்ற மறுக்கமுடியாத , தவிர்க்கமுடியாத
அசம்பாவிதங்கள் தான், மனிதன் மனதில் பீதியையும் பயத்தையும்
உருவாக்கிவிட்டு, அதனால் கடவுள் என்கிற ஒன்றை மனதளவில் மனிதன்
கற்பனை செய்து பின்னர் அதற்கு கோடிக்கணக்கான உருவங்கள்
கொடுத்தான். ஒருவருடைய கர்மவினைகள் தான் அவரவர் வாழ்விற்கு
காரணம் என்றால், பின்னர் கடவுளுடைய பங்கு என்ன? இயற்கையை
நிர்வகிப்பதிலா? அல்லது அந்த இயற்கை தான் கடவுள் என்று
அழைக்கப்படுகிறதா? இயற்கைதான் கடவுளின் பரிமளிப்பு, கடவுளின் உருவம்
இயற்கைதான் என்றால் தவறு ஏதேனும் உண்டா? நாம் எத்தனை முயற்சிகள்
செய்து முன்னேற்றம் என்கிற பெயரில் இயற்கையோடு அவ்வப்போது சிறிது
போட்டியிட்டாலும், அனைத்தையும் கடந்து இயற்கை நம்மை காட்டிலும்
மிகவும் வலியது என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியுமா?

ஒவ்வொருவரும் அவரவருக்கு தேவையான முறையில் வாழ
விருப்பம்கொண்டு அதனால் உருவாக்கப்பட்டதே சமூகம், சமூக நியதிகள்,
ழுங்குமுறைகள் எல்லாமே. இத்தகைய சமுதாயங்கள் இன்று உலகெங்கிலும்
இயங்கி வருகிறது. ஒவ்வொரு சமுதாயமும் தனித்தனியே அதனுடைய
நடைமுறைகள், கோட்பாடுகள், அறநெறிகள், வாழும் முறைகள் என்று பல
கோணங்களில் அடிப்படையில் செயல்பட்டுவருகிறது.

மதம் என்கிற தேவையற்ற மிகவும் கொடிய கண்டுபிடிப்பு தான் மனிதனின்
முதல் பரம விரோதி. உலகில் மதம் என்ற ஒன்றே இல்லாமல் இருப்பின்,
இந்த உலகம் இப்போதயத்தை காட்டிலும் எவ்வளவு சிறப்புடன்
இருந்திருக்கும் என்பதை நாமே யூகிக்கமுடியும். மதம் என்ற பெயரில்
எவ்வளவு முரட்டுத்தனமான நம்பிக்கைகள், முட்டாள்தனமான கொள்கைகள்,
பிற உயிர்களை வதைக்கும் மனிதாபிமற்ற கொடுமையான செயல்கள்
நடந்துகொண்டிருக்கிறது. எவ்வளவு மக்கள் மதச்சண்டையில் உயிரை
கொடுத்திருப்பார்கள். கடவுளின் அவதாரம் என்று சொல்லப்படும் பலர் மதம்
என்ற மனிதனிடமிருந்து மனிதனை பிரித்து வைக்கும் விபரீதமான, மனித
ஒற்றுமையை குலைக்கும் அமைப்புகளை தோற்றுவித்தனர். மதத்தின்
தலைவலிகளே ஜாதி, குலம், இனம் போன்ற கேடுகெட்ட பிரிவினைகள். மதம்
என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் 'சம்மதம்' என்கிற உலக மதம்,
யாதும் ஊரே யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம்" என்ற
அற்புதமான உலக நீதியின் வழியில் சுகமான பயணம்
செய்துகொண்டிருக்கும்.

இறுதியாக, இந்த பிரபஞ்சம்,உலகம் உருவாக, முதல் ஜோடி மனிதர்கள்
இவ்வுலகில் பிறக்க காரணம் முழுமுதற்கடவுள், தெய்வீக சக்தி, இயற்கை
என்று பல வகையிலும் அழைக்கப்படும் அந்த எண்ணமுடியாத,
உணரமுடியாத, அறியமுடியாத, காணமுடியாத ஒரு மாபெரும் அபூர்வ
பிரபஞ்ச சக்திதான். இந்த பிரபஞ்சமும் உலகும் இயங்க, நாம் இவ்வுலகில்
செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் (நல்லவை கெட்டவை) மூல காரணம்
அந்த சக்தியே தான் தார்மீக பொறுப்பை ஏற்கவேண்டும். கர்மா வினைகள்
காரணமாகத்தான் இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறந்து, அவதிப்பட்டு,
அனுபவித்துக்கொண்டு அல்லல் படுவதும், மாயாஜாலம், மர்மம், விந்தை என்ற
அந்த சிந்தைக்கு கிட்டாத மற்றும் எட்டாத அந்த சக்திதான்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (29-Aug-22, 4:39 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 92

மேலே