ஐம்புலனும் ஆரவருங் காலம் குறியா மயக்கென்று கொள் - உண்மை விளக்கம் 19

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

எல்லை பலம்புதுமை எப்போதும் நிச்சயித்தல்
அல்லல் தருங்கிரியை ஆன்மாவுக்(கு) – ஒல்லை
அறிவாசை ஐம்புலனும் ஆரவருங் காலம்
குறியா மயக்கென்று கொள். 19

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

காலதத்துவமானது கழிகாலத்து எல்லையையும் நிகழ்காலத்துப் பலத்தையும் எதிர்காலத்துப் புதுமையையும் பொருத்துவிக்கும்,

நியதி தத்துவமானது எந்தக் காலமும் கன்மத்தை இவ்வளவென்று நிச்சயம் பண்ணி நிறுத்தும்,

கலையானது ஆணவத்தைச் சிறிது நீக்கி ஆன்மாவுக்குக் கிரியையை யெழுப்பும்,

வித்தியா தத்துவமானது ஆன்மாவுக்கு சீக்கிரத்திலே அறிவை யெழுப்பும்,

இராக தத்துவமானது பெற்ற பதார்த்தங்களைச் சிறிதாக்கிப் பெறாததிலே இச்சையை யுண்டாக்கும்,

ஆன்மா பஞ்சேந்திரியங்களிடமாகச் சத்தாதி விடயங்களைப் புசிக்க வருகின்ற அவதரத்தில் புருடதத்துவமானது விடயத்திலே அழுத்துவிக்கும்,

மாயையானது ஒன்றை நினைக்கவொட்டாமல் மயக்கத்தைச் செய்யும் என்றறிவாயாக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-22, 5:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே