454 இறை நினைப்போடு அறம் செய்வதற்கு வருத்தம் ஏன் - அறஞ்செயல் 6

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)

சிற்றுதர போசணைக்கா மலையேறிக் கடல்கடந்து
..தேய மெல்லாஞ்
சுற்றியனு தினமலைவாய் நித்தியபே ரின்பசுகந்
..தோய வேண்டிச்
சற்றுமுடல் வருந்தலின்றி யலைதலின்றி யோரிடத்தே
..தங்கி மூளும்
பற்றினையே துறந்துசும்மா இருந்தறஞ்செய் வதிலென்ன
..பார நெஞ்சே. 6

- அறஞ்செயல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மனமே! சிறிய வயிற்றைப் பேணுவதற்காக மலை கடந்து, கடல் கடந்து, நாடுகளெல்லாம் சுற்றி ஒவ்வொரு நாளும் அலைந்து திரிவாய்.

என்றும் அழியாத பேரின்பமான கடவுள் இன்பத்தைக் கைக்கொள்வதற்காக சிறிதளவி லேனும் உடல் வருத்தமும் அலைதலும் இன்றி ஓரிடத்தே இருந்து, பெருகும் பற்றினை விட்டுச் சும்மா இருந்து புண்ணியம் செய்வதில் என்ன சிரமம்?” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

உதரம் - வயிறு. போசணை - பேணுதல்.
நித்தியம் - என்றும். மூளும் - பெருகும்.
அறம் - புண்ணியம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-22, 7:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே