இயற்கை
பாடும் பறவைகள் கீதத்தில்
ஆடும் மயில் ஆட்டத்தில்
பாயும் நதியின் ஓட்டத்தில்
மாக் கடலின் அலை ஓசையில்
புல்வெளியில் பூஞ்சோலையில்
பார்க்கும் பசுமரத்தில் இலைகளில்
நித்தியம் உதித்து இருந்து
மறைந்து வரும் சூரிய சந்திரரில்
மண்ணின் மனிதரில் விலங்குகளில்
எண்ணிலா தாவரங்களில் என்று
உயிர்த்துடிப்பு எங்கும் பரவி இருக்க
இயற்கையின் எழிலாய் உயிராய்
இவற்றைப் படைத்தவர் யார்
படைத்து காத்து இயக்கும்
அந்த மாபெரும் சக்தி
யார்.....எது அதுவே இறைவன்
என்றால் அதற்கெதிராய் சூள்கொட்டுவோர்
ஒன்றை மறக்கின்றார் இயங்கும்
இயக்கமெல்லாம் இயக்கப் படுபவையே
இயற்கையின் இயக்கமும் அப்படிதான்
பூஜ்யத்தில் இருந்து உருவான அத்தனையும்
அண்டகோளங்கள், நட்சத்திரங்கள்,கோள்கள்
இப்படி இயற்கையில் இவை எல்லாமே
'அவன்' ஆட்டிவைக்கும் பொம்மைகள்
இவற்றைப் படைத்தும் காத்தும் அழிப்பதும்
'அவன்' கேளிக்கையே அன்றி வேறென்ன
தானே ஒன்றும் உருவாவதில்லை அழிவதில்லை
இயற்கையின் துடிப்பில் இறைவன்
'அவன்' ஒருவனே 'தான்தோன்றி'
'அவனுக்கு' ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லைகாண்