சொகுசு பேருந்தில் என் அனுபவம் ஒரு தினுசு

சில நாட்களுக்கு முன்பு முதன்முறையாக ஒரு நவீன புதுமையான சொகுசு பேருந்தில் பயணம் செய்தேன், சென்னையிலிருந்து கோயம்பத்தூர்வரை. அந்த அனுபவத்தை இங்கே என்னுடைய பாணியில் பகிர்ந்துகொள்கிறேன்.

இரவு 9 மணி அளவில் பேருந்து சென்னை கோயம்பேடிலிருந்து புறப்பட்டது. படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து. நன்கு வசதியாக இருந்தது. இந்த வசதிகளை தவிர இந்த பேருந்தில் சிறுநீர் கழிக்கவும் வசதி இருந்தது. இதுபோன்ற பேருந்தில் நான் அப்போதுவரை சென்றதில்லை. எனக்கு இரவில் ஒருமுறை எப்படியேனும் எழுந்து பாத்ரூம் சென்றுவரும் பழக்கம் இருக்கிறது. தூக்கம் சிறிது தடைபட்டால் இரண்டு முறை கூட பாத்ரூம் செல்லவேண்டியிருக்கும்.

பேருந்திலேயே பாத்ரூம் வசதி இருந்ததால், தயக்கமின்றி தண்ணீர் அருந்தினேன். இரவு சுமார் பத்து ,மணி இருக்கும். என் இருக்கையை விட்டு இறங்கி பேருந்தின் பின்புறம் இருந்த பாத்ரூமை நோக்கி சென்றேன். பாத்ரூம் கதவு பூட்டப்பட்டிருந்தது. அங்கிருந்து ஓடும் பேருந்தில் ஆட்டம் ஆடியபடி பேருந்தின் முன்பக்கத்திற்கு சென்றேன். ஓட்டுநர் அருகில் இருந்த உதவியாளரிடம் "பாத்ரூம் செல்லவேண்டும். கதவு அடைத்திருக்கிறது" என்றேன். அவர் "வண்டி சிட்டி லிமிட்டை தாண்டிய பிறகுதான் பாத்ரூமை உபயோகிக்கமுடியும்" என்றார். இதை கேட்டுவிட்டு நான் நினைத்துக்கொண்டேன் " சிட்டி லிமிட்டை தாண்டும் வரை ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது, கழிக்கவும் முடியாது" என்று நினைத்துக்கொண்டேன்.

இரவு பதினோரு மணியளவில் நான் மீண்டும் பின்புறம் ஆடிக்கொண்டே சென்றபோது பாத்ரூமின் வெளிக்கதவு திறந்திருந்தது. உள்ளே சென்றபோது உள்ளே இன்னொரு உட்புறக்கதவு இருந்தது. அதை திறக்க முயன்றேன். முடியவில்லை. நான் நினைத்துக்கொண்டேன் " யாரோ உள்ளே உபயோகித்துக்கொண்டிருப்பார்கள்". மீண்டும் ஆடியபடி முன்னே சென்று பேருந்து உதவியாளரிடம் விவரத்தை சொன்னேன். அவர் " நான் உங்களுக்கு சாவியை கொண்டு தருகிறேன்" என்று கூறினார். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் என்னிடம் பாத்ரூம் சாவியை கொடுத்து " சிறுநீர் கழிக்கமட்டுமே. வேறு எதற்கும் இல்லை " என்று ரகசியமாக என் காதில் கூறினார். நானும் " சிறுநீர் கழிக்கமட்டுமே" என்றேன்.

பேருந்து நல்ல வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்படியும் இப்படியும் ஆடிக்கொண்டு பாத்ரூம் அருகே சென்றேன். பேருந்து ஆடுகின்ற ஆட்டத்தில் சாவியை பூட்டில் நுழைத்து திறப்பதே பெரும்பாடாக இருந்தது. ஒருவழியாக வெளிக்கதவை திறந்துவிட்டேன் . உட்புற கதவுக்கு பூட்டு இல்லை என்றாலும் அதை திறப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஒருவழியாக ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவன் போல உள்ளே நுழைந்து உள்ளே சென்ற காரியத்தை முடித்தேன். சும்மா சொல்லக்கூடாது. பாத்ரூம் சுகாதாரமாகவே இருந்தது. ஆனால் நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது, வேகமாக ஆட்டம் ஆடும் பேருந்தில் உண்மையிலேயே சிரமமாகவே இருந்தது. பாத்ரூமுக்கு வெளியே வந்து மீண்டும் அந்த வெளிக்கதவை பூட்டுவது எரிச்சலையூட்டும் வேலையாகத்தான் இருந்தது. அங்கிருந்து மீண்டும் பேருந்தின் முன்பக்கம் சென்று உதவியாளரிடம் சாவியை கொடுத்தேன். மீண்டும் என் படுக்கை இருக்கை வந்தடைந்தபோது பரங்கிமலை மெட்ரோ ரயிலை பிடிக்க படி ஏறி சென்றமாதிரி இருந்தது.

ஏனோ தெரியவில்லை. மீண்டும் தாகம் எடுத்து தண்ணீர் குடித்தேன். பிறகு படுத்தேன். கண்மூடினேன். புரண்டேன். அப்படியும் இப்படியும் பேருந்தின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு உடலை சரிசெய்துகொண்டேன். விடிகாலை நான்கு மணிவரை இவைகளை செய்துகொண்டிருந்தபோது தூக்கம் என்பது எங்கிருந்து வரும்?
உள்ளே சென்ற தண்ணீர் வெளியில் வந்துதானே ஆகவேண்டும். மீண்டும் விடிகாலை நான்கு மணிக்கு முன்பு வேறு விதமாக ஆடியபடி உதவியாளரிடம் சென்று சாவியை கேட்டு வாங்கி, பேருந்தின் பின்புறம் நோக்கி தள்ளாடி நடக்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே அனுபவித்த எல்லாவித இன்பங்களையும் மீண்டும் அனுபவித்தேன். ( துன்பங்களையும் இன்பங்களாய் காணவேண்டும் என்று, ஏதோ ஒரு ஊர்பேர் தெரியாத அறிஞன் சொல்லி சென்றதை யாரவது அங்கீகரித்தாகவேண்டுமே?). ஒருவழியாக பேருந்தின் உள்ளே கீழே விழாமல் சாவியை பத்திரமாக உதவியாளரிடம் கொடுத்தேன். இருட்டில் தட்டுத்தடுமாறி என் படுக்கை இருக்கைக்கு வந்து படுத்து , டவல் போல் இருந்த ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு படுத்தேன். என்னை அறியாமல் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் தூங்கிவிட்டேன்.

மீண்டும் அதிகாலை ஐந்தரை மணி அளவில் முழிப்பு வந்துவிட்டது. நல்ல வேளை, அந்த நேரத்தில் பேருந்து ஓட்டுநர் உதவியாளர் தேநீருக்காக ஒரு கடையின் அருகே நின்றது. நான் வேகவேகமாக வெளியே சென்று அங்கிருந்த கட்டண கழிப்பறை சென்று வந்தேன். ஓட்டுனருடன் சேர்ந்து நானும் சூடாக தேநீர் அருந்தினேன்.

அங்கிருந்து அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் பேருந்து கோயம்புத்தூர் சென்றடைந்தது. வீட்டில் என் மனைவி கேட்டாள் " புது பேருந்தில் அனுபவம் எப்படி இருந்தது?" நான் சொன்னேன் " என்னவேண்டுமானாலும் சொல்லு. எவ்வளவு சொகுசான பேருந்துகள், ஆகாய விமானங்கள் இருந்தாலும், நம் இந்திய ரயில் வண்டிகளில் பயணம் செய்யும் ஒரு கவலை இல்லாத, உடம்பை மிகவும் உலுக்காத குலுக்காத பாதுகாப்பான அனுபவம் அவற்றில் நிச்சயம் கிடையாது. ஆகாய விமானத்தில் நமக்கு பாத்ரூம் செல்லவேண்டும் என்று நினைக்கும் நேரத்தில்தான் '" வெளியே மேகங்களின் உரசல்களினால் இந்த நேரம் பாத்ரூமை உபயோகிக்கக்கூடாது' என்று அறிவிப்பு வரும். நவீன சொகுசு பேருந்து படுத்துக்கொள்வதற்கு மட்டுமே சொகுசு. மற்ற எல்லாவிதத்திலும் ஒரு தினுசு தான்" என்றபோது, அவளுக்கே உரிய சிரிப்பை உதிர்த்தாள்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (9-Oct-22, 7:44 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 117

மேலே