நவராத்திரி கண்ட சுபராத்திரி
வாணி: ராணி எங்கவீட்டில் கொலு வைத்திருக்கிறோம். அவசியம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிக்கொள்ளவேண்டும்.
ராணி: நிச்சயமாக, கேசரியும் சுண்டலும் எந்த நாள் என்று சொல், அன்றே வந்து வெற்றிலை பாக்கு வாங்கிக்கொள்கிறேன்.
வாணி: ???
ராணி: வாணி, எங்க வீட்டிலும் நவராத்திரி கொலு வைத்திருக்கிறோம். வந்து தாம்பூலம் வாங்கி கொள்
வாணி: புட்டும் கடலை சுண்டலும் என்னிக்கி போடுகிறாய் என்று சொன்னால் வந்து தாம்பூலம் வாங்கிக்க சவுகரியமாக இருக்கும்.
ராணி: ???
ராணி: வாணி, போனதடவை உங்க வீட்டில் ஒன்பது படிகள் இருந்தது, இந்தமுறை ஏன் வெறும் ஐந்து படிகள் மட்டும்?
வாணி: என் தங்கைக்கு இந்த வருடம் கல்யாணமாகி முதல் முறை அவள் வீட்டில் கொலு வைப்பதால் என்னிடம் கொஞ்சம் பொம்மைகளும் கொலுப்படிகளும் கேட்டிருந்தாள் . அவளுக்கு நான்கு படிகளும் கொஞ்சம் பொம்மைகளும் கொடுத்துவிட்டதால் இங்கே படிகளும் பொம்மைகளும் குறைந்துவிட்டது.
ராணி: சரி புரிகிறது. ஆனால் எப்போதும் கொடுக்கும் கேசரி அளவும் சுண்டல் அளவையும் கூட நான்கு பிடிகள் குறைத்துவிட்டாயே?
வாணி: ???
வாணி: ஏண்டி ராணி, இந்த தடவை எல்லா பொம்மைகளும் பளிச்சென்று இருக்கிறது. ஆனால் ஒரு பொம்மையின் முகம் கூட என்ன பொம்மை என்றே தெரியவில்லையே, ஏன்?
ராணி: அது ஒன்றும் இல்லை வாணி. வீட்டிற்கு பெயிண்ட் அடித்தது போக மீதம் இருந்த பெயிண்டை ஏன் வேஸ்ட் செய்யவேண்டும் என்று நான்தான் என் கணவரிடம் சொல்லி எல்லா பொம்மைகளுக்கு பெயிண்ட் அடிக்கசொல்லிவிட்டேன். அவர் என்னடான்னா, எல்லா பொம்மைக்கும் ரெண்டு கோட் பெயின்டிங் பண்ணிவிட்டார். நேத்துகூட பக்கத்துவீட்டு மாமி இங்கு வந்தபோது " ஏண்டி ராணி இப்படி ஏடாகூடமா பண்ணி வைத்திருக்கிறாய். அந்த எக்ஸ்ட்ரா பெயிண்டை எனக்கு பாதி விலைக்கு கொடுத்திருந்தால் நான் என் வீடு முழுவதும் ஒரு கோட் பெயிண்ட் செய்திருப்பேனே" என்று.
வாணி: ???
ராணி: இந்த தடவை நீ செய்த புட்டில் வெல்லம் மிகவும் குறைவாக இருக்கிறது. யார் விரும்பி சாப்பிடுவார்கள் இதை?
வாணி: அந்த கூத்தை என்னன்னு சொல்வது ராணி. நான் நிறைய வெல்லம்தான் பொடிசெய்து வைத்திருந்தேன். என் கணவர் இன்று மதியம் சூடாக வேர்க்கடலை வாங்கி வந்து " கொஞ்சம் வெல்லம் கொடு, இந்த வேர்கடலையுடன் சேர்த்து தின்பதற்கு" என்றதும் நான் " சமையல் அறையில் பொடி வெல்லம் இடித்து வைத்திருக்கிறேன். கொஞ்சம் அதில் எடுத்துக்கொள்ளுங்கள்" என்றேன். பிறகு தான் தெரிந்தது அவர் பாதிக்கு மேலே வெல்லத்தை காலி செய்துவிட்டு, பாதி வேர்க்கடலையை வைத்து விட்டு போய்ட்டார் என்பது. வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தாகவேண்டுமே என்று இருக்கும் வெல்லத்தை புட்டில் கலந்துவிட்டேன்.
ராணி: வீட்டிற்கு அருகிலேயே மளிகை கடை இருக்கிறது. ஒரு கிலோ வெல்லம் வாங்கி வந்து பொடி செய்து போட்டிருக்கலாமே?
வாணி: புட்டு செய்யும் அவசரத்தில் அது ஞாபகம் வரவில்லை.
ராணி: ???
வாணி: ஏண்டி ராணி, போன கொலுவில் இந்த செட்டியார் பொம்மைகளுடைய வயிறும் தொந்தியும் பானை போல நன்கு பெருத்து இருந்தது. இப்போது ஏன் பூனை போல மெலிந்துவிட்டது?
ராணி: அதுஒன்றும் இல்லை. இந்த செட்டியார் பொம்மைகள் மிகவும் பழையது. என் கணவர் இவைகளை சுத்தம் செய்கிறேன் என்று இவைகளின் வயிற்றில் கொஞ்சம் தண்ணீர் ஊத்தி துடைத்தபோது, இந்த செட்டியார்களின் வயிறுகளும் சுருங்கிவிட்டது. இதில் என் மீதும் என் பானை வயிறு கணவர் மீதும் எந்த குறையும் இல்லை.
வாணி: ???
ராணி: இது ரொம்ப அநியாயம் வாணி. எல்லோருமே ஒருமீட்டர் ப்ளௌஸ் துணிதான் தாம்பூலத்துடன் தருகிறார்கள். நீ என்னடான்னா, வெறும் அரைமீட்டர் ப்ளௌஸ் துணி கொடுக்கிறாய். இது ரொம்ப அநியாயம்.
வாணி: இதற்கு நான் காரணம் இல்லை ராணி. ஹோல்சேல்ல ப்ளௌஸ் வாங்கும்போது, பிளவுசுக்கு நான் பாதி விலைதான் கொடுப்பேன் என்பதை அந்த கடைக்காரன் தப்பாக புரிந்துகொண்டு, பாதி விலை மட்டும் வாங்கிக்கொண்டு நூறு பிளவுஸ் துண்டுகளை பேக் செய்து கொடுத்தான். நவராத்திரிக்கு வந்து சென்றவர்கள் வீட்டிற்கு சென்று தினமும் எனக்கு போன் செய்யும்போதுதான் புரிந்தது அந்த பிளவுஸ்காரன் விலைக்கு ஏற்றமாதிரி பிளவுஸ் துண்டையும் பாதியாக வெட்டி கொடுத்துவிட்டான் என்பது. ஒரு எக்ஸிபிஷனில் வாங்கினேன். அவன் பில்லும் கொடுக்கவில்லை. இப்போது அவனை போனில் திட்டுவதற்கும் வழியில்லாமல் இப்படி அவதி படுகிறேன்.
ராணி: சரி, இப்போது தெரிந்துவிட்டது தானே, இனியும் ஏன் இந்த பாதி பிளவுஸ் துண்டுகளை கொடுத்துவருகிறாய்?
வாணி: "நான் மட்டும் இந்த பாதி துண்டு ப்ளவுசுகளை என்ன செய்வேன்'?
ராணி: ???