பிபிசி நிருபர் என்னுடன் உரையாடல்

என் பக்கத்துக்கு வீட்டில் உள்ள பழனியாண்டி சாமியை பேட்டியெடுக்க வந்த பிபிசி நிருபர், என் வீட்டில் நுழைந்து விட்டார். அவர் பிபிசி நிருபர் என்றபோது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. நான் அவரிடம் கேட்டேன். " நீங்கள் பழனியாண்டி சாமியைத்தானே பேட்டி காண வந்தீர்கள். அவர் பக்கத்து வீட்டில் இருக்கிறார்.
நிருபர்: அவர் வீட்டிற்கு போய்விட்டுதான் வருகிறேன். அவர் நான் வருகிறேன் என்று சொல்லியும் சரியான நேரம் பார்த்து பழனி மலைக்கு மொட்டை போட்டுக்கொள்ள போய்விட்டார். நான் இப்போது வெறும் கையுடன் திரும்ப முடியாது. என் அலுவலகத்தில் கோபித்து கொள்வார்கள். ஆகவே அவர் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டில் உள்ள உங்களை பேட்டி காணப்போகிறேன். ஒன்று ஆட்சேபனை இல்லையே?. நான் சொன்னேன் " என்ன சார் சொல்றீங்க, கரும்பு தின்ன கூலியா?
நிருபர்: உங்கள் பெயர் என்ன?
நான்: முனியாண்டி சாமி.
நிருபர்: ஓரளவுக்கு பழனியாண்டி சாமியுடன் உங்கள் பெயர் ஒத்துபோகிறதே.
நான்: ஆமாம். நான் அவர் வீட்டு பக்கத்துக்கு வீட்டில் இருப்பதால் கொஞ்சம் ஒத்துப்போகத்தான் செய்யும்.
நிருபர்: நீங்கள் மொட்டை அடித்துக்கொள்ள எங்கே செல்வீர்கள்?
நான்: நான் உண்மையில் மொட்டைதான். முடி அனைத்தும் கொட்டிப்போய்விட்டது. என் மனைவி சொன்னதன் பேரில் விக் வைத்துக்கொண்டிருக்கிறேன்.
நிருபர்: மொட்டை விஷயத்தில் நீங்களும் பழனியாண்டி சாமியும் நன்றாக ஒத்துப்போகிறீர்கள்.
நான்: அவர் வருடத்திற்கு ஒருமுறை மொட்டை போடுவார். பின்னர் கொஞ்சம் முடி வளரும். எனக்கு அந்த பிரச்சினை இல்லை. ஆனால் தலைக்கு குளிக்கவேண்டும் என்றால் , இந்த விக்கை ஜாக்கிரதையாக கழட்டி வைக்கவேண்டும். இல்லையெனில் என் மனைவி என் இடுப்பை கழட்டி வைத்துவிடுவாள்.
நிருபர்: நீங்கள் மனைவிக்கு பயந்தவரா?
நான்: நான் அப்பள குழவிக்கு பயந்தவன்.
நிருபர்: நான் அப்பள குழவிக்கு பயந்தவன் இல்லை.
நான்: அப்படி என்றால் நீங்கள் உங்கள் மனைவிக்கு பயந்தவர் இல்லைதானே?
நிருபர்: நான் அவளுடைய கராத்தேவுக்கு பயந்தவன். சரி கொஞ்சம் குடிக்க ஏதாவது சூடாக கிடைத்தால் நான் பேட்டியை ஆரம்பிக்கிறேன்.

(என் மனைவி எங்கள் இருவருக்கும் சூடாக பில்டர் காபி கொடுத்தாள். அதன் சுவையை பாராட்டிவிட்டு பிபிசி நிருபர் பேட்டியை ஆரம்பித்தார்)

1. நிருபர்: நீங்கள் ஏன் பிறந்தீர்கள்?
நான்: அப்போது தானே வருடா வருடம் என் பிறந்த நாளைக் கொண்டாட முடியும்.
2. நிருபர்: நீங்கள் ஏன் வளர்ந்தீர்கள்?
பதில்: அப்போது தானே வளர்ந்த பையன் என்று சொல்வார்கள்.
3. நிருபர்: நீங்கள் ஏன் படித்தீர்கள்?
பதில்: பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் பீஸ் கட்டுவதற்காக .
4. நிருபர்: நீங்கள் ஏன் வேலைக்கு சென்றீர்கள்?
பதில்: அப்போது தானே என்னை யாரும் வேலையத்த பயல் என்று சொல்ல முடியாது.
5. நிருபர்: ஏன் சம்பாதித்தீர்கள்?
பதில்: நான் பாதித்தேன் என்று இப்போது எவராலும் கூற முடியாதே .
6. நிருபர்: ஏன் நீங்கள் காதலித்தீர்கள்?
பதில்: பின்னே காதலிக்கவில்லை என்றால் எப்படி ஒருவர் காதல் தோல்வி அடைய முடியும்?
7. நிருபர்: ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?
பதில்: என் மனைவிக்கு திருமணம் ஆகவேண்டும் எனில் வேறு வழி என்ன?
8. நிருபர்: ஏன் அப்பாவானீர்கள்?
பதில்: இல்லையென்றால் எனக்கு வாழ்க்கையில் பதவி உயர்வே இருந்திருக்காதே.
9. நிருபர்: ஏன் மீண்டும் அப்பாவானீர்கள்?
பதில்: பதவி உயர்வு பெற்றால் வேலை பளு அதிகம் தானே.
10. நிருபர்: ஏன் அடிக்கடி கோபம் கொள்கிறீர்கள்?
பதில்: நான் அடிக்கடி மற்றவர்களிடம் காதல் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் வேறு வழி என்ன?
11. நிருபர்: நீங்கள் ஏன் பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறீர்கள்?
பதில்: தருமம் நீதி நியாயம் நேர்மை கண்ணியம் மனிதாபிமானம் இதெல்லாம் இருந்தால் இக்காலத்தில் ஒருவனால் பிழைக்க முடியுமா? நீங்களே நியாயமாக சொல்லுங்க.
12. நிருபர்: ஏன் இப்போது அடிக்கடி எழுதி வருகிறீர்கள்?
பதில்: பேனா உபயோகித்த போது எழுதத் தெரியவில்லை. பேனா தேவையே இல்லை எனும் போது எழுத வேண்டும் என்கிற முட்டாள்தனமான சிந்தனை வருகிறதே என்ன செய்வேன்?
13. நிருபர்: இரண்டு வருடங்களில் நீங்கள் இரண்டு ஆங்கில புத்தகங்கள் வெளியிட்டு ஒவ்வொன்றும் இருபது பிரதிகள் தானே விற்றிருக்கிறது?
பதில்: என்னைப் போலவே இன்னும் இருபது மனிதர்கள் இவ்வுலகில் இருக்கின்றனர் என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்!
14. நிருபர்: அறுபது தாண்டிய பிறகும் ஏன் இன்னும் ஏதாவது செய்யத் துடிக்கிறீர்கள்?
பதில்: இருபதில் துடிப்பு இருந்த போது ஒன்றையும் உருப்படியாக செய்யவில்லை அல்லது வாய்ப்பு இல்லை. இப்போது அறுபதில் வாழ்க்கை படிப்பினை கற்றதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருக்கிறது. இந்த துடிப்பை எப்படி துண்டிப்பது என்பது பற்றி கண்டிப்பாக, நான் கண்டிப்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.
15. நிருபர்: உங்கள் வாழ்க்கையில் ரகசியம் ஏதாவது உண்டா?
பதில்: உங்களிடம் சொல்ல என்ன தயக்கம். ரகசியமான விஷயங்களை தண்டோரா போடக்கூடாது என்று வெளிப்படையாகவே எல்லோரும் கூறுவதால், எப்போதாவது உங்களை சந்திக்க சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயமாக என் வாழ்வின் ஒரு சில பல ரகசிய அனுபவங்களை, ரகசியமாக உங்களிடம் பகிர்ந்து கொள்வேன்.
16. நிருபர்: உங்கள் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று ஏன் கூறுகிறீர்கள்?
பதில்: அது வேற எதுவும் இல்லை, திறந்த புத்தகத்தை மூடி வைக்கும் பழக்கம் இந்த பாழாய்ப் போன மனசுக்கு இல்லையே!

(மிக்க நன்றி முனியாண்டி சாமி. ஸ்வீட் சிக்ஸ்ட்டின் கேள்விகளுக்கு அழகாக அளவான பதிலை அருமையாக தந்தீர்கள். இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வரப்போகும் பிபிசி தமிழ் செய்தித்தாளில் உங்கள் பேட்டியை நிச்சயம் வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு பிபிசி நிருபர் மூடாமல் இருந்த வாயிற்கதவு வழியே பிபிசி நிருபர் வெளியேறுகிறார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் தலையை தடவிக்கொண்டேன் ( விக்கை எடுத்துவிட்டு).

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (6-Oct-22, 8:06 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 61

சிறந்த நகைச்சுவைகள்

மேலே