ஈதலும் ஏற்றலும் இல்லெனில், யாதும் இல்லையாம் – அறநெறிச்சாரம் 185
நேரிசை வெண்பா
கொடுப்பான் வினையல்லன் கொள்வானும் அல்லன்
கொடுக்கப் படும்பொருளும் அன்றால் - அடுத்தடுத்து
நல்லவை யாதாங்கொல் நாடி யுரையாய்நீ
நல்லவர் நாப்பண் நயந்து 185
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
இவ்வுலகத்திலே கொடுக்குங் கொடையாளி கொடுக்குஞ் செயலை மேற்கொள்ளாதவனாயும்,
கொள்பவனாகிய இரவலன் அல்லாமல் யாவரும் செல்வராயும், வழங்குவதற்குரிய பொருளும் வழங்குதற்கு அல்லாமல் ஓரிடத்தே நிலைத்திருக்குமானால்,
சான்றோர்களிடையே அடிக்கடி (ஏற்படவேண்டிய) நற்காரியங்கள் எங்ஙனம் ஏற்படும் (என்பதை) நீ உலக நன்மையை விரும்பியவனாய் ஆலோசித்து சொல்வாயாக.
குறிப்பு:
புரவலரும் இரவலருமின்றி உலகமிருக்குமானால் நல்வினைக்கே இடனின்றி யாவும் நிலைத்திணைப் பொருளாய் நிற்குமென இங்கு நினைப்பூட்டலாயினர்.
‘கொடுக்கப்படு பொருளுமன்றால்’ என்ற பாடபேதம் திருவாளர் செல்வக்கேசவராய முதலியார் கண்டதாம்; இதனைத் தமிழ்ச் செல்வம் என்ற நீதிநூற் தொகையாலும் காணலாம்!.

