முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும் அறிதற் கரிய பொருள் – நாலடியார் 317

நேரிசை வெண்பா

பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றம்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள் 317

- அவையறிதல், நாலடியார்

பொருளுரை:

கொடுப்பவரை மனத்துட் கொள்ளாமல் தாம் பெறுகின்ற விலைப்பொருளையே கருத்தாகக் கொள்ளும் பொது மகளிரின் தோள்கள் பலர்க்கும் எளியவாதல் போல ஒரு தொடர்புற்றுக் கற்பவர் எல்லார்க்கும் நூல்களின் பொதுக் கருத்துக்கள் எளியனவாய் விளங்கும்;

ஆனால், மாந்தளிர் போன்ற மேனியையுடைய அவ்விலை மகளிரின் மனம் யார்க்கும் அறிதல் அருமையாதல் போல, நூலின் உட்பொருள்கள் எல்லார்க்கும் அறிதற்கரியனவாகும்.

கருத்து:

நூல்களின் நுண்பொருள் அறியும் நற்புலவோர் உலகில் மிகச் சிலராவர்.

விளக்கம்:

நெறிப்பட்டுக் கற்பவர்க் கென்றார், ஓரளவு செயற்கை முயற்சிகளால் நூல்களின் மேற்போக்கான கல்வியறிவை யாரும் அறியலாம் என்றற்கு. நூல்களின் ஆழ்ந்த உட்கருத்துக்களே உண்மையிற் ‘பொருள்' என்பதற்குரியனவாகலின், வாளா ‘பொருள்' என்றே கூறினார்.

அவற்றை யறிவரே - நூல்வழி நுனித்த நுழை நுண்ணுணர்வினர் '1 என்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Nov-22, 1:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே