போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து தேற்றும் புலவரும் வேறு – நாலடியார் 318
நேரிசை வெண்பா
(’த்’ ‘ற்’ வல்லின எதுகை) (’ய்’ இடையின ஆசு)
புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்
உ ய்'த்தக மெல்லா நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு 318
- அவையறிதல், நாலடியார்
பொருளுரை:
புத்தகங்களை மிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின் பொருள் தெரியாதவராவர்: பிறர் முயன்று நூல்களை வீடு முழுமையும் நிறைத்து வைத்தாலும் அவற்றை அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்களும் வேறு,
அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும் தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்களும் அவரின் வேறாவர்.
கருத்து:
நூல்களின் கருத்தறிந்து நலம் பெறல் வேண்டும்.
விளக்கம்:
நூல்களிற் தெளிவு பெறுதல் பிறர் முயற்சியாலன்று என்றதனாற் பெறப்படும். பொதுவாகவேனும் நூல்களின் அருமை அறிந்தன்றிப் போற்றுதலாகாமையானும், அப்போற்றுதலொன்றும் அவரை அவ்வறிவுத் துறையிற் செலுத்தும் வாயிலாதலானும் அவரும் ஈண்டுப் புலவரெனப்பட்டனரென்க.
‘பொருள் தெரிந்து' என்றார்; பயன்கொண்டு என்னும் பொருட்டு; "நூல் விளைந்தனைய நுண்சொற்புலவர்"1 என்றார் பிறரும்.

