ஒருதலையாச் சென்று துணியா தவரே இருதலையும் காக்கழித் தார் - பழமொழி நானூறு 208

நேரிசை வெண்பா

இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார்
நல்வாழ்க்கை போக நடுவுநின்(று) - எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியா தவரே
இருதலையும் காக்கழித் தார். 208

- பழமொழி நானூறு

பொருளுரை:

இல்லறத்தை யாயினும் அஃதின்றி நின்ற துறவறத்தை யாயினும் தாம் மேற்கொண்டு ஒழுகாதவராகி சிறந்த வாணாள் வறிதே கழிய இடை நின்று எல்லாவற்றையும் ஆழ்ந்து உறுதியாகத் துணிந்து ஒருநெறியில் ஒழுகாதவர்களே,

காவின் இருபக்கத்திலுமுள்ள பொருளை நீக்கித் தண்டினைச் சுமந்து நின்றாரோடு ஒப்பர்.

கருத்து:

இரு வாழ்க்கையினுள் ஒன்றிலும் துணிவோடு ஒழுகாதவர்கள் இம்மை மறுமை இன்பங்களைப் பெறார்.

விளக்கம்:

'துணியாதவரே' என்றது நூல்களின் கருத்தறியாது, இல்வாழ்க்கை பெரிதோ, துறவற வாழ்க்கை பெரிதோ என்று ஐயங்கொண்டாராய் ஒரு நெறியிலும் துணிவில்லாது நிற்பவர்களைச் சுமந்து நின்ற ஒருவன் காவின் இருகடையுமுள்ள பொருளை ஒழித்து வெறுந் தண்டினைச் சுமந்துநிற்றல் போல, இல்வாழ்க்கையில் நில்லாமையால் இம்மைப் பயனையும், துறவற வாழ்க்கையில் நில்லாமையால் மறுமைப் பயனையும் இழந்து நிற்பராயிற்று.

'இருதலையும் காக்கழித்தார்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Nov-22, 4:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே