110 காதலர் ஒற்றுமை கணக்கிலாப் பெரும் பொருள் - கணவன் மனைவியர் இயல்பு 2

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

மணியுமொளி யும்போலாண் மகனுமனை வியும்பொருந்தி
..வாழு வாரேல்
பிணியுறுமா துலரெனினும் பெருஞ்செல்வர் நகுலமும்வெம்
..பெரும்பாம் பும்போல்
தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிரற்ற
..சவத்தின் மீது
பணிகண்மிகப் பூட்டியலங் கரித்தலொக்கு மவர்செல்வப்
..பயன்தா னம்மா. 2

- கணவன் மனைவியர் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மணியும் ஒளியும்போல் ஆண்மகனும் அவன் மனைவியும் மனம் பொருந்தி வாழ்வாரானால், அவர்கள் நோயுற்ற வறியவர்களே என்றாலும் பெருஞ்செல்வர் ஆவர்.

இங்ஙனமின்றி கீரியும், கொடிய பெரிய பாம்பும் போல் மனதில் கொஞ்சமும் குறையாத பகைமை கொண்டு ஒற்றுமையோடு சேர்ந்து வாழாரெனின், அவர்களின் செல்வம் உயிரற்ற பிணத்தின் மேல் நகைகள் பலவும் அணிந்து அலங்காரம் செய்ததற்கு ஒப்பான பயனைத் தரும் என்று இவ்வாசிரியர் இடித்துக் கூறுகிறார்.

ஆண்மகன் - கணவன். ஆதுலர் - வறியர். நகுலம் - கீரி. தணியாத - நீங்காத. சவம் - பிணம்.
பணி - அணிகள்; நகைகள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Oct-22, 2:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே