109 உடலுயிர்ச் சண்டையாம் காதலர் பிணக்கம் - கணவன் மனைவியர் இயல்பு 1
முனிசீப் மாயவரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீதி நூலின் 11 வது அதிகாரம் கணவன் மனைவியர் இயல்பு. இதில் நாற்பத்து எட்டுப் பாடல்கள் இயற்றி இருக்கிறார்.
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
ஆவியின்றி யுடலில்லை யுடலின்றி யாவியிலை
யதுபோற் பத்தா
தேவியெனு மிருவர்சேர்ந் தோருருவாஞ் செழுமலருந்
தேனும் போல
மேவியவ ரிருவருமே நள்ளாது முரண்செய்யில்
விளங்கு மெய்யுஞ்
சீவனுமொன் றோடொன்று போராடி யழிந்ததொக்குஞ்
செப்புங் காலே. - 1
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்,
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
உயிரில்லாமல் உடலும், உடம்பில்லாமல் உயிரும் இல்லை. அது போல கணவன், மனைவி என்ற இருவரும் ஓருருவாக செழுமையான பூவும் தேனும் போல சேர்ந்து வாழவேண்டும்.
சிறப்பான இவர்கள் இருவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழாது முரண்பாடு கொண்டு பிணங்கினால், அதைச் சொல்லப் போனால், இருக்கின்ற அவர்களின் உடம்பும் உயிரும் ஒன்றோடொன்று சண்டையிட்டு அழிந்து போவதற்கு ஒப்பாகும்.
நள்ளல் - சேர்தல். செப்புங் காலே - சொல்லப் போனால்