ஒரே பொருள் இடவேறுபாட்டால் உயர்வும் தாழ்வும் – அறநெறிச்சாரம் 188
நேரிசை வெண்பா
பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படு தெண்ணீர் அமுதமாம் - ஓம்பற்(கு)
ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்
களியாம் கடையாயார் மாட்டு 188
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
பாம்புகள் பருகிய நீரனைத்தும் நஞ்சாக மாறுதல் போல கயவர்கள் கற்கும் ஞானநூல்கள் அவர்களுக்கு மயக்கத்தையே விளைவிக்கும்;
அதுபோல், பசுக்கள் பருகிய தெளிந்த நீர் இனிய பாலாக மாறுதல்போல, உயர்ந்தோர்கள் கற்கும் ஞான நூல்கள் அவர்ளுக்குப் போற்றுதற்குரிய அறிவினை வளர்க்கும்.
குறிப்பு:
களி - களிப்பைத் தருவது; மயக்கம். தேம் - இனிமை; நல்ல சுவை, படுதல்-பொருந்துதல்