பதினெண் மேல்கணக்கு
பதினெண் மேல்கணக்கு – 1
பதினெண் வயதுகள்
முன், பின்னாக.
பார்வைகள்
முன், பின்னாக.
வாழ்க்கையோ
முன், பின்னாக.
பதினெண் மேல்கணக்கு – 2
விழிகள் சுமந்த உருவம்.
கழுவக் கழுவக்
கரையாமல்
பளிச், பளிச்சென்று.
வயதின் ஆசையா?
வாழ்வின் ஆசையா?
பதினெண் மேல்கணக்கு – 3
ஆசைகள்
இழுத்துக்கொண்டு போயின..
தள்ளி விடவோ?
தாங்கிக் கொள்ளவோ?
அடையும் வெறியில்
அடைந்த துயர்கள்.
வாழ்வு பறிக்குமோ
வாழ்வு சிரிக்குமோ?
பதினெண் மேல்கணக்கு – 4
விரட்டி விரட்டிப் போனதுவும்
விரட்டி மிரட்டி அனுப்பியதும்
தொரட்டியில் சிக்காத கனியாய்
தொங்கிக் கொண்டு வாழ்க்கை.
ஒரு விருப்பமா?
மறு விருப்பமா? பிறர்
தரு விருப்பமே
தகும் விருப்பமாம்.
பதினெண் மேல்கணக்கு – 5
பின் தொடர்வது
பின்,
தொடர்வதற்காகவா?
பூக்குமா?
பூக்குமா? என்று
விழிகள் பூத்து
ஆசையை ஆசையில்
கலந்து ‘கூடி’.
பதினெண் மேல்கணக்கு – 6
வரும்வதை சகித்து
வருவதை அணைத்து
வாழ்வினைச் சுகித்து
கொள்ளவும், கொடுக்கவும்.
ஓட்ட நீட்டங்களில்
உடன்போய்.
ஒருவரை, ஒருவர் அல்ல
அவர், அவரை வென்று,
உள்ளத் தாக்குகளை
ஒதுக்கி,
உடன்படல்.
பதினெண் மேல்கணக்கு – 7
மூளையின் கைப்பிடியில்
முரண்டும் மனம் அடக்கி.
இதற்குத் தானே என்றில்லாமல்
இதை விரும்பித்தானே என்று.
பகிர்விலும் நுகர்விலும்
வாழ்வை ருசிப்படுத்தி
வாழ்வை நிஜப்படுத்தி.
பதினெண் மேல்கணக்கு – 8
நோக்கி, நோக்கி
நுழைந்து, நுழைந்து
கலைந்து விடாமல்
தாக்கித் தாக்கித் தளர்ந்துவிடாமல்
தன்னிரக்கம் வளர்ந்துவிடாமல்
அடுத்தவரை அல்ல
உங்களை முதலில்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
பதினெண் மேல்கணக்கு – 9
சுவர்கள் தகர்த்து
பாலம் போட்டீர்.
பாலம் தகர்த்து
சுவர் வைக்காதீர்!
காலம் எத்தனை?
காதலையா அள்ளிப்பருகினீர்?
தாகம் தீர்த்தது
ஒருவருக்கு மற்றவர் தானே.
பதினெண் மேல்கணக்கு – 10
காற்றிலே கொடுத்த முத்தம்
நெற்றியில் மட்டுமா?
நெஞ்சத்தில் அல்லவா
ஒட்டிக் கொண்டது.
கொதித்த நெருப்பை
அணைத்துத்தானே
குளிர்ச்சிப் படுத்தினீர்!
பதினெண் மேல்கணக்கு – 11
வசீகரங்களின் தாக்குதலில்
வசமிழந்தீர்.
வார்த்தைகள் மாயம் செய்தன.
பேசி, பேசியே சேர்ந்தீர்கள்.
பேச்சே பிரிக்குமோ!
பலமே, பலவீனமானதா?
பதினெண் மேல்கணக்கு – 12
நீங்கள்
நிஜமாயிருப்பீர்களா
உங்களுக்கு?
பிறகு, பிறர்க்கு?
அடைய வந்தீர்களா?
இழக்க வந்தீர்களா!
ஆசைகள் முடித்துவைக்குமா?
தொடர வைக்குமா?
பதினெண் மேல்கணக்கு – 13
தாக சாந்தியா!
மோக சாந்தியா?
அன்பு சாந்தி இல்லையா!
சந்தி சிரிப்பது இருக்கட்டும்.
தனித்தனியே
இருவர் அழுவதற்கா?
ஒன்று சேர்ந்தீர்கள்.
பதினெண் மேல்கணக்கு – 14
இயற்கையின் உந்துதல்
இயற்கையின் இயக்கம்
இயற்கை மயக்கம்
தெளியுங்கள்!
இலை உதிரும்,
வசந்தம் வரும்
நிலா உதிராதே.
பதினெண் மேல்கணக்கு – 15
கன்னங்களில் இருந்த உன் காதலை
பின்னங்களில் பிறழ விடாதே!
வண்ணங்களை அழித்தது
உன் மனம், நீ.
இப்போது தான்,
விரல்களை நீட்டுகிறாய்.
உன் விரல்கள்
முன்பு என்ன செய்து கொண்டிருந்தன?
பதினெண் மேல்கணக்கு – 16
ஆசை, அன்பு,
காதல், காமம்
கூட்டுக் கணக்கு
குடும்பக் கணக்கு!
மேல்கணக்கு என்பது
மேலே, மேலே உயர்வது
மானுட உச்சம்,
தொட்டுப் பார்ப்பது.
தொட்டுப் பார்க்க
உங்களுக்குத் தெரியாதா?
பதினெண் மேல்கணக்கு – 17
மேல் கணக்கு என்பது
மேலான கணக்கு
கீழ்க் கணக்குகளை
கிட்டவிடாதே.
கூட்டலைக் கழிக்காதே.
கணக்குகளுக்குள்
பிடிபட மறுக்கும்
கணக்கு இது,
கவனம் தேவை.
கண்ணாடியைத்
தவற விடாதே.
பதினெண் மேல்கணக்கு – 18
காதல் என்பது
ஓடுகாலித்தனம் அல்ல.
அது ஓர் ஒழுக்கம்.
எடுப்பது அல்ல
ஏமாற்றுவது அல்ல...
கொடுப்பதே வாழ்க்கை.
வள்ளன்மை ஒன்றே
வாழும்.