பதினெண்கீழ்க்கணக்கு
பதினெண்கீழ்க்கணக்கு 1
கீழ்ப்பார்வையால்
மேற்பார்வை செய்கிறாய் என்னை!
உன் கணக்கு சரிதானா என்று
என் விழிகளில்
உன் விழிகள் கூட்டி
சரிபார்க்கிறாய்!
என் விழிகளில் கசியும் காதலை
உன் இதயத்துக்குள்
பத்திரப்படுத்தியபடியே
வரட்டுமா என்கிறாய்!
பதினெண்கீழ்க்கணக்கு 2
வரட்டும்! வரட்டும்! என்று
நீ வரும்வரை
வாட்டும் உன் மோகத்தீயில்
கருகியபடி காத்திருக்கிறேன்!
நல்ல வேளை
சாம்பலாகுமுன் வந்துவிடுகிறாய்
நான் உயிர்த்தெழுகிறேன்!!
பதினெண்கீழ்க்கணக்கு 4
இல்லாமலும் போகலாம்
இல்லையா?
பூக்கள், சலசலக்கும் நதி,
புல்வெளிப் பச்சை
தேன், கனிவர்க்கம்
கிடைக்கலாம் இல்லையா?
என்ன இருக்கின்றது என்று
இப்போதே தீர்மானிக்க முடியுமா?
அப்புறம் எப்படி நாம்
காதல் என்று தீர்மானிப்பது?
பதினெண்கீழ்க்கணக்கு 5
சட்டென்று தீர்மானிக்க
முடியாதெனினும்
கால அவகாசம்
எத்தனை தேவை?
பூ பூத்து
காய்த்து, கனியக்
காலம் தேவை.
வார்த்தைகளால்
எத்தனை காலம்
ஏமாற்றலாம்?
பதினெண்கீழ்க்கணக்கு 6
தன்னையறியாத
தொடரும் பேச்சுக்களில்
வெளிப்படாமல் போகுமா?
வெளிப்படாமல் போனாலும்
அன்பின் கனிவில்
காதல் கூடும்.
கூடாவிட்டால்
குறைவு யாருக்கு?
பதினெண்கீழ்க்கணக்கு 7
குறையச் சம்மதமா?
நிறைய விருப்பமா?
நாம் அறிந்தோ
அறியாமலோ
நம் மனம்,மூளை
கணக்குப் போட்டுக்கொண்டே
இருக்கிறது.
கணக்குத் துல்லியமானதா?
அவரவர் அறிவின்
அளவில் பட்டதே.
பதினெண்கீழ்க்கணக்கு 8
பெருவெள்ளம்அடித்துச்சென்ற
சொத்து, சுகம்போல
ஒரே அடியாய்
மனம்
ஒருவன் பின்
ஓடி விடுகிறது.
காப்பாற்ற வேண்டிய மூளை
கைகட்டி, வாய்பொத்திக் கிடப்பதைத்தான்
புரிந்து கொள்ள முடியவில்லை.
பதினெண்கீழ்க்கணக்கு 9
குழப்பத்தில் நீடிக்கிறது.
வறுமை, நோய் போல.
நாட்கள் நடக்கின்றன
வாழ்க்கை
பேட்டரி தீர்ந்த கடிகாரம் மாதிரி
நின்று விடுகிறது.
இந்த அவகாசத்தில்
உறவு பலப்படலாம்.
பிரிவும் வரப்படலாம்.
பதினெண்கீழ்க்கணக்கு 10
அர்த்தம் இழந்த நாட்களும்
வருத்தம் தொடர்ந்த நாட்களும்
மோசம் போன நாட்கள் என்று
முடிவுக்கு வர முடியாது.
இன்றையப் பதிலே
இறுதியானது, உறுதியானது
என்றும் கூற இயலாது.
பதினெண்கீழ்க்கணக்கு 11
நாளை எதுவும் நடக்கலாம்.
நிறைவேறுவது போல
நிறைவேறாமலும்,
நிறைவேறாது போல
நிறைவேறுவதும் நடக்கலாம்.
பதினெண்கீழ்க்கணக்கு 12
வாழ்க்கை உன்கையிலா?
அவள் கையிலா?
வேறு யார் கையிலா?
உன் பேச்சில், அவள் பேச்சில்
சேர்வதும், பிரிவதும்
எதுவும் நடக்கலாம்.
பதினெண்கீழ்க்கணக்கு 13
தீர்மானங்களும்
வைராக்கியங்களும்
வென்றதும் உண்டு
தோற்றதும் உண்டு.
ஆற்றில் வெள்ளம் புரள்வதும்
காய்ந்து கிடப்பதும்
ஆற்றின் கையிலா?
பதினெண்கீழ்க்கணக்கு 14
வாழ்வின் ருசிகளைக்
காதல் ருசி, ஒரு வேளை
காவு வாங்கலாம்.
காதல் எதைக் கோருகிறது
வாழ்வையா? மரணத்தையா?
பதினெண்கீழ்க்கணக்கு 15
சுகம், சுவை என்ற
வரையறைக்குள் மட்டும்
அடைபடுமா? காதல்?
பதினெண்கீழ்க்கணக்கு 16
துள்ளி, எழும், அழும்
மனக் குழந்தையை சமாதானப்படுத்துங்கள்.
மூளையின்
அடைபட்ட கதவுகளைத் திறவுங்கள்.
காதல் போயின் சாதலல்ல....
பதினெண்கீழ்க்கணக்கு 17
வாழ்வையே, பிய்க்க நினைக்கும்
காதலைத் துரத்துங்கள்.
வாழ்க்கை, இல்லாத
வாழ்க்கை எதற்கு?
பதினெண்கீழ்க்கணக்கு 18
உறவாய் கூடுவதால் நல்லதா?
பிரிவதால் நல்லதா?
இப்போதைய மனத்துடிப்பில்
கூடுவதே நல்லதெனப் படலாம்.
பிரித்ததோ , பிரிந்ததோ
பின்னாளில் நல்லதாய்ப் படலாம்.