மல்லி மணம்போல் உள்ளம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
உலகம் முழுதும் உயர்ந்து செழிக்க உரமாய் இருந்த மொழியே தமிழாம்
வலமாய் இடமாய் புகுந்த மொழிகள் வரவால் சிறிது வதங்கி ஒதுங்க
சிலையை வணங்கும் வகையின் நிகழ்வில் சலனம் குறைந்த நிலையால் இழப்பு
பலமாய் படைப்பை படைக்க சிறந்த பதமாய் இருக்கும் தமிழை சுமப்போம்
அல்லி செழிக்கும் ஆழ்ந்த குளத்து ஆழம் நிலையாய் நூல்கள் தமிழில்
மல்லி மணம்போல் உள்ளம் மயக்கி மாயம் தருதே நல்லோர் எழுத்தும்
வெல்லும் வகையில் வித்தாய் மனதுள் விந்தைப் பணியைச் செய்யும் தமிழும்
மெல்ல உறுதி எண்ணம் வரவே மாயம் புகுத்தும் ஆளும் தமிழும்
அறிவியல் என்றும் அறங்கள் என்றும் அறிவை ஆழ்ந்த தமிழில் சொன்னோம்
அறிவிலே மிக்கோர் அரிதாய் செய்த அபார ஓலை துறந்து நின்றோம்
அறிவினை விட்டே அயர்ந்த மக்கள் அறபாழ் செய்கை உணர்ந்த தேத்தோர்
அறிந்துமே கற்று அனைத்தும் கொள்ளை அடித்தே ஆய்ந்து பெருமை பெற்றார்
உயர்ந்த மொழியாம் உலகத் தமிழில் உயர்ந்த தத்துவம் நிறைந்து உள்ளதே
முயன்று பயின்றால் மலையை விடவும் மிகுந்த நூலினை படைக்கச் செய்யலாம்
அயர்ந்தே இருந்தால் அனைத்து பொழுதும் அவலம் மிக்கதாய் எதையும் மாற்றிடும்
நயந்து இருந்தும் நகர்ந்தே இருப்பின் நனிசொல் வல்லவர் குலமும் அல்லிலே
--- நன்னாடன்.