இன்னிசை இருநூறு - வாழ்த்து 5

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

அக்காலத்தில் இக்கவிகளையெல்லாம் கேட்ட கந்தசாமிக் கவிராயர், இவைகள் பெரிதும் பயன் தரவல்லன என்று கருதி, 200 வெண்பாக்களைத் தொகுத்து, இயன்றவரை பொருட்பொருத்தம் நோக்கி, 20 அதிகாரமாகச் செய்து இன்னிசை இருநூறு என்ற பெயருடன் 1904 ல் விவேகபாநு 4 வது தொகுதியில் வெளியிட்டார்.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த ஐந்தாம் பாடலின் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

பாடல் 5:

நூலினைப் போற்றுதூஉம் நூலினைப் போற்றுதூஉம்
காலங் கருதாது காய மிறுவரையும்
வாலறிவ னற்றாள் வணங்கிப் பிறப்பறுக்கச்
சாலத் துணையா தலான். 5

இறுவரையும் - அழியுமளவும்

புரிந்து கொள்ள எளிமையாக சந்தி பிரித்து இப்பாடல்:

நூலினைப் போற்றுதூஉம் நூலினைப் போற்றுதூஉம்
காலம் கருதாது காயம் இறுவரையும்
வாலறிவன் நற்றாள் வணங்கிப் பிறப்பு அறுக்கச்
சாலத் துணை ஆதலான். 5

தெளிவுரை:

நூல்களைப் போற்றுவோமாக! நூல்களுக்குக் குறிப்பிட்ட கால வரையறை இல்லை; நமது உடல் சாய்ந்து இறப்பு ஏற்படும் வரை, தூய்மையும் நன்மையும் பெருமையும் கொண்ட அறிவின் வடிவான இறைவனின் பாதங்களைப் பணிந்து போற்றி, பின்னும் பிறக்காத நிலையடையும்படி நமக்குத் துணையாக இருப்பதனால், அறநெறி நூல்களைக் கற்று, நூல்களைப் போற்றுவோமாக! என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2 - கடவுள் வாழ்த்து

இங்கே, கற்றதனால் ஆகும் பயன் வாலறிவனாகிய கடவுளின் நற்பாதங்களைத் தொழுவது என்றும்,

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. குறள் 8 - கடவுள் வாழ்த்து

அவ்வாறான அறவாழி அந்தணனாகிய கடவுளின் தாள் சேர்ந்தவர்களே பிற ஆழி எனப்படும் பிறப்பு மற்றும் அதனொடு சம்பந்தப்பட்ட மற்ற கடல்களையும் நீந்திக் கடக்க இயலும் என்றும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10 - கடவுள் வாழ்த்து

பிறவியாகிய பெருங்கடலை இறைவனடியை நினைந்து பணிவோரே கடக்க இயலும் என்றும் திருவள்ளுவர் கூறுவதை நினைவில் கொள்வது இன்பம் பயக்கும்.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (17-Nov-22, 12:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே