426 இறப்பகற்ற அறியார் செய் வியப்பால் என்ன பயன் - யாக்கை நிலையாமை 8

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

புகைவண்டி யூர்ந்துலகை நொடிக்குள்ளே சுற்றிடுவோம்
..புகைக்கூண் டேறிக்
ககனமிசைப் பறவையெனப் பறப்போமோர் புகைக்கலத்தாற்
..கடல்க டப்போம்
வகையாய்மின் னஞ்சலினா லெத்திசையுள் ளாரோடும்
..வார்த்தை சொல்வோம்
மிகையான புதுமைசெய்வோம் மரணமதை விலக்கறியோம்
..வியப்பீ தன்றோ. 8

- யாக்கை நிலையாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”புகைவண்டியில் ஏறி, சில நொடியில் உலகைச் சுற்றி வருவோம். புகைக் கூண்டில் ஏறிப் பறவையைப் போல் வானத்தில் பறப்போம். ஒரு புகைக் கப்பலால் பெருங் கடலையும் கடப்போம்.

வகை வகையாகிய மின் அஞ்சலினால் எத்திசையில் உள்ளவரோடும் பேசுவோம். மேலும், அளவில்லாத வியத்தகு செயல்களைச் செய்வோம். ஆனால், உடலுக்கு வரும் மரணத்தை நீக்க மட்டும் வழி அறியோம். இது ஒரு ஆச்சர்யம் அல்லவா?” என்கிறார் இப்பாடலாசிரியர்.

ககனம் - வானம். மின்னஞ்சல் - தந்தி. திசை - புலம். வியப்பு - ஆச்சரியம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Nov-22, 7:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே