427 யாக்கை மாளும் நாளை அடையாளம் அறியோம் - யாக்கை நிலையாமை 9
அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
அண்டாண்டங் களின்றூர நிலையளவு கூறுவோம்
..அருக்கன் திங்கட்(கு)
உண்டாகுங் கிராணமதை முன்சொலுவோங் கடிகாரத்(து)
..உதவி கொண்டு
தண்டாத காலமதை யளவிடுவோம் இன்னுமிகு
..சமர்த்துஞ் செய்வோம்
கொண்டாடுந் தேகமிது வீழ்காலம் அறிவதற்கோர்
..குறிப்பின் றம்மா. 9
- யாக்கை நிலையாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”உருண்டையான உலகின் கோளங்களின் தொலைவு, நிலை, சுற்றளவு முதலிய பிறவும் வகைப்படுத்திச் சொல்லுவோம்.
ஞாயிறு திங்கட்கு உண்டாகும் கிரகணத்தை முன் ஆய்ந்து உரைப்போம். கடிகாரத்தின் உதவி கொண்டு காலக் கணக்கை வரையறுத்துக் கூறுவோம். மேலும் பல திறமையான செயல்களும் செய்வோம்.
நாம் விரும்பிப் பேணும் இவ்வுடம்பு எப்பொழுது மாளும் என்பதை உணர்வதற்கு ஒரு குறிப்பும் இல்லையே, அம்மா” என்று வருந்துகிறார் இப்பாடலாசிரியர்.
அண்டம் - உலக உருண்டை. அருக்கன் - ஞாயிறு.
சமர்த்து - திறமை. வீழ்காலம் - மாளும் பொழுது.
கிராணம் - கிரகணம் பற்றுதல்.