113 இன்சொலால் நல்வழிக்குத் திருப்புதல் - கணவன் மனைவியர் இயல்பு 5

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

கொழுநனாயி னுமனையாயி னுமியல்பில் லாரென்னிற்
..கூறின் சொல்லாற்
செழுமைநெறி யினிற்றிருப்ப வேண்டுமிதத் தால்வசமாஞ்
..சினவி லங்கும்
அழல்வதினாற் றுன்பமிகு மல்லாது பயனுளதோ
..வருநோ யுற்ற
விழிமிசைநன் மருந்திடாத ழற்பிரம்பை விடிலந்நோய்
..விலகுங் கொல்லோ. 5

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்,
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை

பொருளுரை:

கணவனாயினும் மனைவியாயினும் நல்ல தன்மை இல்லாதவரானால் ஒருவரை ஒருவர் இன்சொல்லால் நல்லவழிக்குத் திருப்புதல் வேண்டும். இனிமையாகப் பழகும் முறையால் கொடிய விலங்கும் நம் வசமாகிக் கட்டுப்படும்.

கோபம் கொள்வதனால் துன்பம் அதிகமாகுமே அல்லாமல் வேறு பயன் ஏதும் உண்டாகுமா? கண்ணில் ஏற்பட்ட நோய்க்கு தகுந்த மருந்தை விடாமல் காய்ச்சிய கோலை விட்டால் அந்த நோய் நீங்குமா? என்றும் இவ்வாசிரியர் கேட்கிறார்.

கொழுநன் - கணவன். செழுமைநெறி - நல்வழி. அழல் - காய்ச்சிய. பிரம்பு - கோல்.


இன்றோ படிப்பறிவினாலும், பட்டறிவினாலும், செழுமை நெறியில் சொன்னாலும் கூடப் பெண்கள் திருந்தி வசமாவதில்லை;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Nov-22, 7:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே