456 உடன் ஒழிக்காவிடில் பாவம் ஒழியாது - அறஞ்செயல் 8
அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா
பெருவெள்ளஞ் சேர்ந்தபின்ன ரதைத்திருப்ப வொண்ணுமோ
..பெருத்து நீண்ட
தருவின்கோ ணலைநிமிர்க்கத் தகுமோபா வங்களைநீ
..தள்ளி மேலாங்
கருமமதின் முயலென்றாற் பின்னையா கட்டுமென்றாய்
..கசடு விஞ்சி
ஒருமலைபோ லானபின்னெவ் வாறதைநீ சாம்பருவத்
..தொழிப்பாய் நெஞ்சே. 8
- அறஞ்செயல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மனமே! வெள்ளம் பெருகி விட்டால் வேண்டியபடி அதைக் கால்வாய்களில் திருப்ப முடியாது. பெருத்து வளர்ந்த மரங்களின் கோணலான கிளைகளின் வளைவைப் போக்கும்படி நிமிர்க்கவும் முடியாது.
அது போல, பாவங்களை நீக்கி மேலான புண்ணியத் தைச் செய் என்றால் பின்னால் செய்யலாம் என் கிறாய்!
செய்யும் தீமை பெருகி ஒரு மலை போலப் பாவங் கள் பெருகிய பின், நீ எவ்வாறு சாகுங்காலத்தில் அவைகளை ஒழித்தல் முடியும்?” என்கிறார் இப்பாடலாசிரியர்.
கசடு - தீமை. விஞ்சி - பெருகி.