455 தீமையை ஆரம்பத்திலேயே தொலைத்தல் செம்மை - அறஞ்செயல் 7
அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா
கலமூறுஞ் சிறுநீரை விரைவினிறை யாவிடினக்
..கலந்தான் மிக்க
சலமூறி யழுந்துமது போற்பவத்தை விரைவுற்றுத்
..தள்ளி டாமல்
நிலமீதில் யாம்வாளா இருப்போமேற் பாவங்கள்
..நிறைந்து மோக்க
நலநீங்கி நரகமெனும் பேராழி யிடைவீழ்ந்து
..நலிவோம் நெஞ்சே. 7
-அறஞ்செயல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”நெஞ்சே! கடலில் செல்லும் கப்பலில் இடைவெளி வழியாக ஊறும் சிறிதளவு நீரையும் விரைந்து இறைத்து விடவேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் மிகுதியாகப் பெருகி அக்கப்பல் கடலில் மூழ்கி விடும்.
அது போல, நாம் செய்யும் தீவினைகளை விரை வில் அகற்றி விடாது இவ்வுலகில் நாம் இருப்போ மானால், அவை பெருகி மோட்சமாகிய பேறு பெறும் வாய்ப்பை இழந்து நரகமென்னும் பெருங் கடலில் விழுந்து மிக்க துன்பம் அடைவோம்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
கலம் - கப்பல். ஊறும் - கசியும். பவம் - தீமை.
நரகம் - இருளுலகம். நலிவு - துன்பம்.