கள்இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)
வெள்எருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி,
..மேலும் கீழும்
எள்இருக்கும் இடனின்றி, உயிரிருக்கும் இடன்நாடி,
..இழைத்த வாறோ?
கள்இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில்
..கரந்த காதல்
உள்இருக்கும் எனக்கருதி, உடல்புகுந்து தடவியதோ
..ஒருவன் வாளி? 299
- இராவணன் வதைப் படலம், யுத்த காண்டம், ராமாயணம்
பொருளுரை:
ஒப்பற்ற இராமபிரானின் அம்பு வெள்ளை எருக்கம் பூவை (முடியில்) சூடும் சிவபெருமானுடைய கயிலை மலையைத் தூக்கிய இராவணனுடைய அழகிய உடலின் உடம்பின் மேல்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும்; எள் இருக்கும் இடம் கூட இல்லாமல் உயிரிருக்கும் இடம் முழுவதையும் தேடி ஆராய்ந்த வண்ணமோ?
தேன் குடிகொள்ளும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய சீதாதேவியை மனமெனும் சிறையில் ஒளித்து வைத்திருந்த காதலானது உள்ளே (இன்னும் எங்காவது) பதுங்கியிருக்கும் என்று எண்ணி உடல் முழுதும் நுழைந்து நுழைந்து தடவிப் பார்த்ததோ?
இறப்பின் பின் நிகழும் புலம்பலில் எள்ளைச் சுட்டிய நயம் காண்க!

