கரப்புடை யுள்ளங் கனற்று பவரே செருப்பிடைப் பட்ட பரல் - பழமொழி நானூறு 224
இன்னிசை வெண்பா
தருக்கி ஒழுகித் தகவல்ல செய்தும்
பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்
கரப்புடை யுள்ளங் கனற்று பவரே
செருப்பிடைப் பட்ட பரல். 224
- பழமொழி நானூறு
பொருளுரை:
(பிறர் தன்னை மதியாத இடத்து) தன்னைத்தானே மதித்து ஒழுகித் தகுதியல்லாத செயல்களைச் செய்தும், பிறர் தன்னை மிகுதியும் மதித்த இடத்து அவர் விரும்பத் தகாதனவற்றைச் செய்தும் மறைந்த எண்ணங் கொண்டு பிறரை வருத்துபவர் செருப்பில் பொருந்தி இருக்கும் பருக்கைக் கல்லை ஒப்பர்.
கருத்து:
கரந்த உள்ளமுடைய கீழ்மக்கள் பெரியோர் செய்யும் செயல்களுக்கு இடையூறாக நிற்பர்.
விளக்கம்:
செருப்பில் உள்ள பரல் தன்னை உடையானைச் செல்லாதவாறு தடுத்தல் போல, கரவுடையார் பெரியோர் செயல்களுக்கு இடையூறாக நின்று விலக்குவர்.
'செருப்பிடைப் பட்ட பரல்' என்பது பழமொழி.