கன்னனி நல்ல கடையாய மாக்களின் – நாலடியார் 334

நேரிசை வெண்பா

கன்னனி நல்ல கடையாய மாக்களின்;
சொன்னனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று
உற்றவர்க்குத் தாமுதவ லான் 334

- பேதைமை, நாலடியார்

பொருளுரை:

மக்களிற் கடைப்பட்டவரான பேதையரை விடக் கற்பாறைகள் மிக நல்லனவாம்;

ஏனெனில், அவை இக்கடைப்பட்டவர்களைப் போல் சான்றோர் உறுதிமொழிகளை முற்றும் உணரமாட்டாவாயினும் தம்மை அடைந்தவர்க்கு உடனே நின்று கொள்ளல், இருந்து கொள்ளல், சாய்ந்து கொள்ளல், நடந்து கொள்ளல் என்று பலவற்றிற்கும் இடம் உதவுதலால் என்க.

கருத்து:

சொல்வது உணராமையும் தாமேயுஞ் செய்யாமையும் பேதையோர் இயல்பாகும்.

விளக்கம்:

இன்னினியே, உடனே என்னும் பொருட்டு, 1 உணராததொன்று.அந்நிலைமைக்கு வேறான உதவுதலைச் செய்தலாகத் தானெடுத்து மொழிதலால் ‘தாம் உணராவாயினும்'‘தாம் உதவலான்' என இருமுறை ‘தாம்' என்னும் பெயர்ச்சுட்டுக் கொடுத்து விதந்தார்.

பலவற்றிற்குமென ஒரு சொல் வருவிக்க.கற்பாறைக்கும் பேதைக்கும் உணராமை பொதுவாயினும் கற்பாறையால் உதவியுண்டென்று ஒரு வேறுபாடு காட்டி ஏதுவின் நிறுத்துக் கல் நனி நல்ல வென்றாரென்பது;

நனி நல்லவென்றார், நினைத்த வண்ணமெல்லாம் உதவுதலாலும், அவ்வுதவுதல் சிறந்த அறமாதலானும் என்க

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Nov-22, 5:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே