செய்தானை ஒவ்வாத பாவையோ இல் - பழமொழி நானூறு 226
இன்னிசை வெண்பா
செயிர்அறு செங்கோல் சினவேந்தன் தீமை
பயிர்அறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையும்
செவ்வாய் முறுவல்நற் சின்மொழியாய்! செய்தானை
ஒவ்வாத பாவையோ இல். 226
- பழமொழி நானூறு
பொருளுரை:
பவளத்தை ஒக்கும் சிவந்த வாயினையும் புன்முறுவலையும் இனிய சிலவாகிய மொழியினையும் உடையாய்!
குற்றமற்ற செங்கோலையும் சினத்தையும் உடைய அரசனது தீமையை குற்றமற்ற பக்கத்திலுள்ள அமைச்சர்களே முன்நின்று ஏற்றுக்கொள்ளக் கடவர்;
செய்தவனை ஒத்திராத சித்திரமோ உளவாதல் இல்லை.
கருத்து: அரசன் செய்யும் தீமை அமைச்சர்களைச் சாரும் என்பதாயிற்று.
விளக்கம்:
'பக்கத்தார்' என்றார், ஆசிரியரும் 'உழையிருந்தான்' என்றலின் ஒவ்வாத என்றது கருத்திற்கு ஒவ்வாமையாம். சித்திரிப்பானது கருத்திற்கொவ்வாத சித்திரம் உளவாதல் இல்லை. அமைச்சர்களது கருத்திற்கொவ்வாத செயல்களும் அரசன்மாட்டு உளவாதல் இல்லை. அரசனது தீயசெயலை அவர் முன்நின்று இடைவிலக்காதொழியின் அஃது அவரது கருத்திற்கும் இசைந்ததாகக் கொள்ளப்படும்.
உறுதி கூறலாகிய தங்கடமையினின்றும் நீங்கியதால் இது நிகழ்ந்தமையின் இஃது அமைச்சர்கள் கொள்ளக் கடவதே யென்பதாம். உறுதி கூறாக்கால் அவனதிறுதி யெய்தற் குற்றத்தை உலகந் தன் மேலேற்றும் என்பார், 'கூறல் கட' னென்றார் என்று பிறர் விரித்துரைத்ததுங் காண்க.
பாவையது நன்மை தீமைக்குச் செய்வோன் காரணமாதல்போல, அரசனது நன்மை தீமைக்கும் அமைச்சர்கள் காரணமென்பதாம்.
'செய்தானை ஒவ்வாத பாவையோஇல்' என்பது பழமொழி.