புரையக் கலந்தவர் கண்ணும் கருமம் உரையின் வழுவாது உவப்பவே கொள்க - பழமொழி நானூறு 227

இன்னிசை வெண்பா

புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின் வழுவா(து) உவப்பவே கொள்க
வரையக நாட விரைவிற் கருமம்
சிதையும் இடராய் விடும். 227

- பழமொழி நானூறு

பொருளுரை:

மலைமேலுண்டாகிய நாடனே!

உள்ளம் ஒப்ப நட்புக்கொண்டவரிடத்தும் அவரால் உளவாகும் செயலை கூறுஞ் சொற்களில் வழுவாது அவர்கள் மனம் மகிழும்படி செயலை முடித்துக் கொள்க!

தமக்கு வேண்டிய பொழுதே அச் செயலைக் கொள்ள விரைவாயாயின் செயலும் முடிவுறாது இடையிலே அழிந்தொழியும், அங்ஙனம் அழிதலால் தமக்குத் துன்பம் உண்டாகும்.

கருத்து:

மேற்கொண்ட செயலை அமைதியாகச் செய்க; இல்லையாயின் மிகுந்த துன்பங்களை அடைவாய்.

விளக்கம்:

உரையின் வழுவாது என்றது இனிய சொற்களின் நீங்காது என்றபடி.

'உவப்ப' என்றமையின், அவர் துன்புறக் கொள்ளல் ஆகாது என்பதாம். அங்ஙனம் கொள்ளினும் பயனின்றி யொழியும்.

'விரைவிற் கருமம் சிதையும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-22, 9:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே