555 உயிர்வாழ் காற்றிங் குதவினோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 13

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

மாதலஞ் சுழல லாலும்
..மாமதி சுழல லாலும்
ஆதவன் கிரணத் தாலும்
..அந்தர மசைவுற் றாகும்
ஊதலஃ தின்றேற் சீவர்
..உய்ந்திடார் பெருங்கால் மாக
மீதமர் விடத்தை நீக்கும்
..வியந்திக்கால் தந்தோன் யாரே. 13

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

பெரிய நிலவுருண்டை இடைவிடாது சுற்றுவதாலும், அழகிய திங்களும் அப்படியே சுற்றுவதாலும், ஞாயிற்றின் கதிர்களாலும் பெரிய அசைவு உண்டாகின்றது. அவ்வசைவினால் காற்றுண்டாகின்றது. அக் காற்று இல்வழி ஓர் அறிவு முதல் ஆறறிவு ஈறாகச் சொல்லப்படும் எல்லா உயிரினங்களும் வாழ்தல் முடியாது. விசும்பில் நிறைந்துள்ள வாலாமையாகிய நஞ்சினைப் போக்குவதும் அக்காற்றேயாம். உயிர்கள் வாழும்படி அப்பெருங்காற்றினை எல்லாரும் வியப்புறத் தந்தருளினோன் முழுமுதல்வனாவன்.

மாதலம் - பெரு நிலம். சுழலல் - சுற்றல். ஆதவன் - ஞாயிறு; கதிரவன். ஊதல் - காற்று. சீவர் - உயிர்கள். மாகம் - விசும்பு. கால் - காற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-22, 8:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே