556 இடிமின்னால் நஞ்சகற்றி மழையீந்தோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 14
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
அகலிடத் திருந்து பன்னீர்
..ஆவியைப் பானு கையாற்
ககனமீ தீர்க்கக் காராங்
..கடினத்தால் இடியாம் பல்கார்
இகலொடு பொருத மின்னாம்
..இடித்தல்வான் விடம கற்றும்
சகலமு முய்யப் பெய்யுஞ்
..சலதரம் ஈந்தோன் யாரே. 14
– தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
விரிந்த இடத்திலுள்ள நீர்நிலைகள் பலவற்றினின்று நீராவியை ஞாயிற்றின் கதிர்க் கையால் வானத்தில் இழுத்தவுடன் மழையாம். அது செறியச் செறிய ஒன்றோடொன்று மோதலால் இடியுமின்னலும் உண்டாகின்றன.
இடியினால் வானத்திலுள்ள நச்சுக் காற்றுக்கள் அகலும். எல்லாவுயிர்களும் வாழும்படி மழைபெய்ய அருளுவோன் யாவன்? அவனே முழுமுதற் கடவுள்.
பானு - ஞாயிறு. விடம் - நஞ்சு. சலதரம் - முகில்; மழை.