348 கடுஞ்சொற் கூறுவோர் கயவரே ஆவர் – இனிய சொற்கூறல் 5
கலிவிருத்தம்
(கூவிளம் கருவிளங்காய் கூவிளம் புளிமா)
வன்மொழி யுரைக்கினெதிர் வன்மொழி கிடைக்கும்
இன்மொழி யுரைக்கின்வரு மின்மொழி யெமக்கும்
நன்மொழிக ளேபல விருக்கநவி லாமற்
புன்மொழி யுரைப்பவர்கள் பூரியர்க ளன்றோ. 5
– இனிய சொற்கூறல். நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நாம் யாருடனும் வன்மொழி பேசினால், உடனே நமக்கும் வன்மொழியே கிடைக்கும். இன்சொல் சொன்னால் இன்சொல்லே நமக்கும் கிடைக்கும்.
நல்ல சொற்கள் பல இருக்க அவற்றைப் பேசாது இழிவான கடுஞ்சொல் பேசுவோர் தாழ்வானவர்கள் அல்லவா!” என்கிறார் இப்பாடலாசிரியர்.
பூரியர் - தாழ்வானவர்.