தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை எங்கண் வணக்குதும் என்பவர் – நாலடியார் 336
நேரிசை வெண்பா
தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை
எங்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று 336
- பேதைமை, நாலடியார்
பொருளுரை:
அழகிய தளிர்களையுடைய புன்னை மரங்கள் மலர்களைப் பூக்கின்ற கடற்கரையாய்!
தம்மிடத்தில் மதிப்பில்லாதவர் வழிச்சென்று அவரை எம்மிடம் அடங்கும்படி செய்வோம்' என்று சொல்லுவோர் கருதும் அச்சிறியோர் தொடர்பு, கருங்கல்லைக் கிள்ள முயன்று ஒருவன் கைவிரலை இழந்ததனோடு ஒக்கும்.
கருத்து:
திருந்தா இயல்புடையது பேதைமையாகும்.
விளக்கம்:
மரபென்பது ஈண்டு நன்மதிப்பு.
புன் கேண்மை என்றார், அப்பேதையர் தொடர்பை; கல்லையுங் கிள்ள முடியாது தாமுங் கைவிரலிழந்தாற் போல அப் பேதையோரையுந் திருத்த முடியாமல் தாமும் அவரால் தீங்குறப் பெறுவரென்பது; "கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்"1என்றார் பிறரும்.