கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு நாத்தின்னும் நல்ல சுனைத்து – நாலடியார் 335

நேரிசை வெண்பா

பெறுவதொன்(று) இன்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண்(டு) ஏலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து 335

- பேதைமை, நாலடியார்

பொருளுரை:

தனது சினத்துக்கு ஏதுவாகப் பெறுங் காரணம் ஒன்று இல்லாதிருந்தும் அக்காரணம் பெற்றவனே போலக் கோபித்தலை மேற்கொண்டு தனது சினம் சென்று தாக்குதலில்லாத உயர்ந்தோரிடத்தும் கோபத்தால் இன்னாச் சொற்களைத் தொடுத்துரைத்துப் பேசாவிட்டால் பேதைகளுக்கு மிக்க தினவு நாவை அரித்து விடுவது போலிருக்கும்.

கருத்து:

பேதை மாக்கள் காரணமில்லாமலே பிறரைப் பகைத்தும் பழித்தும் நாத் தினவாற் சும்மா பேசியபடியே இருப்பர்.

விளக்கம்:

கறுவென்றது மனத்தின் நிகழுஞ் செற்றம்; கோத்து என்றார், காரணத்தோடு அறிஞர் தொடுப்பது போற் போலியாக முறைப்படுத்தியென்றற்கு. கூறியென்றதன் மேலும் உரையாக்கால் என்றார்,

விளக்கங் கூறுவது போல வாளா பன்னிப் பன்னிப் பேசுதலினென்க. அதற்குக் காரணம் தினவேயல்லது வேறில்லாமையின், அதன் மிகுதி தோன்ற ‘நாத்தின்னும் நல்ல சுனைத்து' என்றார்; இஃது, ‘உண்டற்குரிய வல்லாப் பொருளை உண்டனபோலக் கூறும்'1 ஒரு மரபு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-22, 8:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

சிறந்த கட்டுரைகள்

மேலே