483 கணவன் நிறைகெடின் மனைவியும் கற்பழிவள் – கணிகையரியல்பு 10

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

இரதியனை யார்பாற்போய் நாம்வருமுன் எங்குசென்றாய்
..எனவில் லாளைப்
பொருதிவின விடவிரதி புருடனனை யார்பாற்போய்ப்
..புணர்ந்தே னென்றாள்
விரதமுள்ளா யெங்கிதைநீ கற்றதென்றோம் உம்மிடத்தும்
..விருப்பா யும்மைச்
சுரதஞ்செய் பவரிடத்துங் கற்றதென்றாள் வேறினிநாஞ்
..சொல்வ தென்னே. 10

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

(மனமே!) காமன் மனைவியை ஒத்த பொதுமகளிர்பால் நாம் போய் இன்புற்று வருமுன் நம் மனைவி வெளியில் எங்கோ சென்று விட்டாள்.

வந்ததும், அவளைச் சார்ந்து நீ எங்குச் சென்றாய் என்று வினவினேன்.

அவள், `காமனையொத்த ஆடவரைக் கலந்தின்புறச் சென்றேன் என்றாள்’.

`கற்பினின்றும் வழுவாத பெருநோன்புடையவளே! இவ்வாறு கற்புக் கெடும் தீயொழுக்கம் புரிய யாரிடம் கற்றது, என்றேன்.

அவள், `உம்மிடத்தும் உம்மை விருப்பமுடன் இனிமை செய்யும் பொதுமகளிடத்தும் கற்றது என்றாள்.

இனி நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? (நம் தீயொழுக்கமே அவளைத் தீய ஒழுக்கத்தில் செல்லச் செய்கிறது)

இரதி-காமன் மனைவி. சுரதம்-இனிமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-22, 3:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே