559 மயிர்தோல் வலுவாய் வகுத்தோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 17
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
அறிவிலா விலங்கு போர்வை
..அகஞ்செய வறியா தென்னச்
செறிமயிர் பெருந்தோல் செய்து
..சீதவுட் டணநோய் தீர்த்தான்
மறிகவ சங்க ளில்லம்
..வனைந்திட வறிந்த மாக்கள்
பொறியுடல் களைமென் றோலாற்
..போர்த்தினோன் சீர்த்தி யோனே. 17
– தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
பகுத்தறிவுப் பண்பாம் கருத்தில்லாத விலங்கு முதலிய சிற்றுயிர்கள் குளிர் தாங்கும் போர்வையும், பற்றி வாழும் குடிசையும் அமைத்துக் கொள்ளும் ஆற்றலற்றவை.
ஆகவே அவற்றிற்கு மயிர் அடர்ந்த தோல் போர்வை அமைத்துத் தட்ப வெப்ப நோய் நீங்கி வாழத் துணை புரிந்தனன்.
ஆறறிவு வாய்ந்த மக்கட்கு வேண்டுங் காலத்துப் போர்வை போர்த்து மாட மாளிகை யமைத்து மனைவி மக்கள் விருந்து சுற்றமுடன் வாழ்வதற்கேற்ற உடலுறுப்பு உணர்வுகளை உதவினன். அத்தகையோனே சிறந்த கடவுளாவன்.
சீதம்-தட்பம். உட்டணம்-வெப்பம். கவசம்-போர்வை. இல்லம்-வீடு. சீர்த்தி-சிறப்பு.