மறுபிறப்பினை ஒழிக்க வழி – அறநெறிச்சாரம் 208
நேரிசை வெண்பா
பறவை அரும்பொருள்; இன்சொல் முதிரை;
உறுதிக்கண் ஊன்உண் விலங்கு; - சிறியன
நீர்ப்புள்; குயக்கலம் புல்லவை; ஊர்வது
பேர்த்தீண்டு வாரா நெறி
- அறநெறிச்சாரம் 208
பொருளுரை:
இரப்போர்க்கு அரிய பொருள்களை ஈ; இனிய சொற்களைக் கொள்; ஆன்மலாபத்துக்கு உரியவற்றைச் செய்யுங்கால் மடங்கல் (நிலை தளராதே); அற்ப இன்பங்களை உள்ளல் (கருதாதே); அற்பர்களது அவையை அகல் (சேராதே); இவற்றை மேற்கொள்வதே மறுபிறவி வாராமல் தடுக்கும் உபாயமாகும்.
பதவுரை:
அரும்பொருள் பறவை - இரப்போர்க்கு அரிய பொருள்களை ஈ;
இன்சொல் முதிரை - இனிய சொற்களைக் கொள்;
உறுதிக்கண் ஊன் உண் விலங்கு - ஆன்மலாபத்துக்கு உரியவற்றைச் செய்யுங்கால் மடங்கல் (நிலை தளராதே);
சிறியன நீர்ப்புள் - அற்ப இன்பங்களை உள்ளல் (கருதாதே);
புல்லவை குயக்கலம் - அற்பர்களது அவையை அகல் (சேராதே);
ஊர்வது பேர்த்து ஈண்டு வாராநெறி - இவற்றை மேற்கொள்வதே மறுபிறவி வாராமல் தடுக்கும் உபாயமாகும்.