வீட்டுநெறிகட்கு உரியன - அறநெறிச்சாரம் 207

நேரிசை வெண்பா

நல்வினை நாற்கால் விலங்கு; நவைசெய்யுங்
கொல்வினை யஞ்சிக் குயக்கலம் - நல்ல
உறுதியும் அல்லவும் நாட்பேர் மரப்பேர்
இறுதியில் இன்ப நெறி 207

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

நல்வினைகளைச் செய்ய முயல் (விலங்கு);

துன்பத்தைத் தரும் தீவினைகளை யஞ்சி அகல் (குயக்கலம்);

சிறந்த ஆன்ம லாபத்தைப் புல் (நாட்பேர், தழுவு);

ஆன்ம லாபம் அல்லாதவற்றை முனி (வெறுத்துவிடு);

இவை வீடு பேற்றினுக்குரிய நெறிகளாகும்.

பதவுரை:

நல்வினைகளைச் செய்ய முயல்; துன்பத்தைத் தரும் தீவினைகளை யஞ்சி அகல் (விலகு);
நல்ல உறுதி நாட்பேர் - சிறந்த ஆன்மலாபத்தைப் புல் (தழுவு);
அல்ல மரப்பேர் – ஆன்மலாபம் அல்லாதவற்றை, முனி (வெறுத்துவிடு);
இறுதியில் இன்பநெறி - இவை வீடுபேற்றினுக்குரிய நெறிகளாகும்!

குறிப்பு:

குயக்கலம்-குயவனால் செய்யப்பட்ட மட்பாண்டமாகிய அகற்சிட்டி; அகல் - விலகு;
நாட்பேர் – புல் (தழுவு); அனுடநாள்; மரப்பேர் - முனி; அகத்திமரம்; அன்றிப் பலாச மரமுமாம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Dec-22, 6:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே