85 நலமெலாம் பாலர்க்கு இளமையில் நண்ணும் - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 2
கலிவிருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
வளையிள மரந்தனை நிமிர்த்தல் வாய்க்கும்பொன்
இளகிய பொழுதணி யியற்ற லாகுதல்
வளமுறு கேள்விநூன் மாண்பு நற்குணம்
இளமையி லன்றிமூப் பெய்தின் எய்துமோ. 2
- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”சிறு செடியாக உள்ள இளமையான மரத்தின் வளைவை நிமிர்த்துவதும், பொன்னை இளக்கிய பொழுது நகை செய்வதும் முடிவதுபோல், வளம் பெறக்கூடிய கேட்டலும், நூல் கற்ற மாண்பும், நற்குணமும் மக்கட்கு இளமையில்தான் பெறமுடியும்.
அதுவல்லாமல் வயது முதிர்ந்த பின் இவற்றை அடைய முடியுமா” என்று இளமையிலேயே கல்வி கற்று மாண்பும், நற்குணமும் பெற வலியுறுத்துகிறார் இப்பாடலாசிரியர்.
அணி - நகை. நண்ணும் - கிட்டும், பெறமுடியும்