226 மதுகுடியால் நோய் மறதி இழிவு பெறுவர் – மது அருந்துவதன் விளைவு 1

கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

ஞானமெய்ச் சுகம்புகழ் நலம்பெ றத்தனந்
தானமே செய்குவர் தகுதி யோரறிவு
ஈனமெய் மறதிநோ யிழிவு றப்பொருள்
வானென வழங்குவர் மதுவுண் போர்களே. 1

– மது அருந்துவதன் விளைவு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தகுதியுடையவர்கள் மெய்யுணர்வு, உண்மையான இன்பம், புகழ், உடல்நலம் பெறுவதற்குத் தம் நற்பொருளை நல்லவர்க்குத் தானம் செய்வர்.

மது உண்போர் அறிவின்மை, உடல்மறதி, நீங்கா நோய், சமுதாயத்தில் மரியாதை இழப்பு முதலியன பெறும் வகையில் தங்கள் பொருளை மழைபோல் வாரி இறைப்பர்” என்று மது உண்பதால் பெறும் இழப்புகளை இப்பாடலாசிரியர் 200 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவிக்கிறார்.

இன்று அரசே மதுபான வியாபாரம் செய்து குடிகாரர்களையும் பெருக்கி, அதனால் ஏற்படும் குற்றங்களும் பெருகி, ஈரல் முதலிய நோய்களால் ஏற்படும் மரணங்களுக்கும் காரணமாகி, அதனால் பெறும் வருமானத்தைப் பெருக்குவதைப் பறைசாற்றும் அவலம் நடந்தேறுகிறது!

நேற்று தொலைக்காட்சியில் நாகேஷ் குணசித்திர வேடத்தில் அருமையாக நடித்த ’யாருக்காக அழுதான்’ என்ற திரைப்படம் பார்த்தேன். அதில் மது அருந்துவதால் ஏற்படும் பல விளைவுகளை மிக அருமையாக கதாசிரியர் காட்டியிருக்கிறார்.

ஞானம்-மெய்யுணர்வு. தனம்-பொருள்.
மது – மயக்கம் தரும் கள், சாராயம் போன்ற பிற பானங்கள்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Dec-22, 8:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே