இசைஞானி இளையராஜா
02-ஜூன்-2025
*பிறந்தநாள் வாழ்த்து*
இசைஞானி இளையராஜா
அவர் ஒரு சகாப்தம்...
அவரால் நித்தம் மகிழ்கிறது
உலகம் பல தசாப்தம்..
இளையராஜா... இந்த பெயர்
மின்காந்த அலைகளில்
பரவிய உன்னதம்..
இளையராஜாவின் இசை...
இதய அலைகளில்
நிரம்பிய உற்சாகம்..
அவரது இசையைக் கேட்பது
அது பற்றிப் பேசுவது சுகம்..
இதயத்தில் பாடல்களைத் தேக்கி
எழுதுவது சுகமோ சுகம்..
கல்வியில் முனைவர் பட்டம்
வாங்கி விடலாம்
படிப்பு எனும் வேள்வி செய்து..
இசை என்னும் தவம்
என்னதான் செய்தாலும்
பாடல்களுக்கு இசையமைப்பது
சிலருக்குத்தானே வரமாகும்...
வரமான இசையை
இளையராஜா வசப்படுத்தினார்..
ரசிகர்களை வசியப்படுத்தினார்.
இது இறைவனின் ஏற்பாடு..
அவர் பாடலுக்கு இல்லை ஈடு..
இளையராஜா.. அன்று
பிரச்சாரப் பாடல்களுக்கு
மாட்டு வண்டிப் பயணம்..
திறமை வளர்த்து அயராது
உழைத்து இன்று சிம்பொனியின்
பொருட்டு ஐரோப்பாவிற்கு
வான்வழிப் பயணம்..
இதனால் பெருமிதம் கொண்டது
பிறந்த ஊர் பண்ணைப்புரம்..
ஊரெல்லாம் பேச்சு..
உலகெல்லாம் பேச்சு..
ராஜா சிம்பொனி போட்டாச்சு..
மகாகவி பாரதியும்
இசைஞானி இளையராஜாவும்
ஒரே ஜாதி... ஆம்
சாதிகள் இல்லையடி பாப்பா
என்பதை வேதமாய்ச்
சொல்லும் உயர்ந்த ஜாதி..
என் பதினோரு வயதில்
அன்னக்கிளி உன்னைத் தேடுதே
மச்சான பாத்தீங்களா பாடல்கள்
வாராவாரம் வானொலியில்
கேட்டு ரசித்தது
இன்று நினைவுக்கு வரும்..
அறுபத்தோரு வயதில்
நினைத்த நேரம் யூடியுப் பில்
பாடல்கள் ரசிப்பது.. அது
இறைவன் கொடுத்த வரம்..
திரைப் படங்களுக்கு
இளையராஜா இசையமைக்க
ஆரம்பித்த பிறகு சினிமா
கொட்டகைகளில் சைக்கிள்களின்
எண்ணிக்கை அதிகம் ஆகின..
கேண்டீன்களில் பலகாரங்கள்
நிறைய விற்றுத் தீர்ந்தன..
திரை உலகம் விழித்தது
இசை உலகம் சிலிர்த்தது..
ஒரு தனி மனிதன் ஒரே நாளில்
கோடி.. கோடி மனிதர்களின்
இதயங்களில் சிம்மாசனமிட்ட
அதிசயம் நிகழ்ந்தது..
மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது..
இளையராஜாவின் இசை
ஆஹா அற்புதமான இசை..
என்ன அற்புதமான பாடல்..
இது போல் பாடல்கள்
இதுவரை கேட்டதில்லையே..
துள்ளாத மனங்களையும்
துள்ள வைத்தது..
பாடல்கள் சினிமா
தியேட்டருக்கு அழைத்தன..
தியேட்டர்கள் பாடல்களை
மீண்டும் மீண்டும் கேட்க வைத்தன..
சாலைகளில் வாகனங்கள்
மெதுவாகவே நகர்ந்தன..
ஒலிபெருக்கிகளில் ராஜாவின்
பாடல்கள் கேட்டு...
விரைவாகச் சென்றால்
காதில் விழும் பாட்டுகள்
காற்றில் கரைந்து
போகும் என்பதால்...
பள்ளிக்காலம் கல்லூரிக் காலம்
இளையராஜா பாடல்களால்
எல்லாம் ஆனது வசந்தகாலம்..
இளையராஜாவின் புதிய
படங்கள்.. புதிய பாடல்கள்
வந்த போதெல்லாம்
எங்களுக்கு நித்தம் நித்தம்
தீபாவளி கொண்டாட்டம்...
பேருந்து நிலையங்கள்
கோவில் திருவிழாக்கள்
டீக் கடைகள்.. ஹோட்டல்கள்
கல்லூரி விழாக்கள்
மாணவர் விடுதிகள்
எங்கும் எதிலும்
இளையராஜா பாடல்கள்
ஒலித்துக் கொண்டிருந்தன..
கால நேரம் எதுவும் பார்க்காமல்..
தேர்வுக்கு தயாராகும்
கல்லூரி மாணவனும்
புத்தகத்திற்கு பக்கத்தில்
டேப் ரெக்கார்டரில்
இளையராஜா பாட்டை
ஒலிக்க விட்டு
படித்துக் கொண்டிருந்தான்..
ஏன் என்று கேட்டால்
அப்பொழுது தான்
நிறைய நேரம் படிக்க முடியுமாம்..
விடிய விடிய படிக்க முடியுமாம்..
காரணங்கள் அழகாய்
அடுக்கிச் சொன்னான்..
தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்..
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்த்தது
தூது வந்ததோ..
சேதி சொன்னதோ..
பாடல்கள் கேட்டு விடுதி
அறையை பூக்கள் பூக்கும்
அழகு நந்தவனமாகக்
கருதிக் கொண்டான்..
கமலின் நடனங்கள்
ரஜினியின் ஸ்டைல்
விஜயகாந்தின் ஆக்ரோஷம்
மைக் மோகனின் நளினம்
சிவகுமாரின் நவரசம்
சத்யராஜின் எல்லாம்
நடிகர்களின் நடிக்கும்
பாணியில் பாடல்கள்
அமைந்தது அவரவர்
ரசிகர்களை கவர்ந்தது..
இசைஞானி இசைத்தவற்றில்
பிடித்த பாடல்கள் எவை என
என்னைக் கேட்டால்
"மச்சான பார்த்தீங்களா" முதல்
"வழிநெடுக காட்டு மல்லி" வரை
எல்லாப் பாடல்களும்
என்றுதான் நான் சொல்வேன்..
நான் பிறப்பதற்கு முன்பே
ராஜா இசைக்காக பணி புரிந்து
நான் பணி நிறைவு பெற்ற
பின்பும் அவர் புரிகிறார் பணி..
இசைக்கிறார் சிம்பொனி..
அவரது வாழ்க்கை சொல்கிறது
உழைக்கச் சொல்லி
உழைத்துப் பிழைக்க சொல்லி..
அதற்கு வயது ஒன்றும்
தடை இல்லை என்றும் சொல்லி..
அவரது இசையோடு சேர்ந்த
ஒவ்வொரு பாடலும் அவர்
புகழ் பாடும் கவிதை...
தேவைதான் இல்லை அவரைப்பற்றி
இன்னொரு கவிதை..
எண்பதுகளில்
தொண்ணூறுகளில்
பொங்கல் தீபாவளி என
சீசனுக்கு சீசன் வெளியாகும்
சினிமா படங்கள் பல..
அதில் பெரும்பாலானவை ராஜா
ஒருவரே இசை அமைத்தது
இசைப் பயணத்தில் மைல்கற்கள்..
அவரது புகழ் மகுடத்தில்
வைரக் கற்கள்..
அவர் இசையமைத்த
ரஜினி.. கமல்.. மோகன்
படங்களுக்குள் இருக்கும்
போட்டி.. ஆனால் இசையில்
இவருக்கு இவர் தான் போட்டி..
தமிழ் சினிமாவில்
ரஜினியின் "தளபதி"
கமலின் "நாயகன்"
சினிமாக்களை அளக்கும்
அளவு கோல்கள்...
இரண்டையுமே இசையமைத்தது
இசைஞானியின் ஹார்மோன்கள்..
இளையராஜாவின் இசை
என்பதற்காகவே பெரிய வெற்றி
பெற்ற படங்கள் பல..
பயணங்கள் முடிவதில்லை..
படம் அதற்கு உதாரணம்..
அவரது இசையின்
பயணங்கள் முடிவதில்லை
என்பதே நிதர்சனம்...
கல்யாணம்.. காது குத்து
கட்டிடத் திறப்பு.. பூப்புனித
நீராட்டு.. இங்கு போடும் சாப்பாடு
சொந்தங்களுக்கு மட்டும்...
ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும்
பாட்டு ஊரார் எல்லோருக்கும்..
ஒலி பெருக்கிகளில்
இசையை இலவசமாக
கேட்டு கேட்டு பழகிய இதயங்கள்
இளையராஜா பாடல்களை
அலசி ஆராயத் தெரிந்து இருந்தன..
இது மௌனமான நேரம்
இளம் மனதில் என்ன பாரம்..
ஆகாய கங்கை பூந்தேன்
மலர் சூடி.. பொன் மான்
விழி தேடி.. மேடை கட்டி
மேளம் தட்டி பாடுதே மங்கலம்..
பூந்தளிராட பொன் மலர் சூட..
ரோஜாவை தாலாட்டும் தென்றல்..
பொத்தி வச்ச மல்லிக மொட்டு
பூத்திருக்கு வெட்கத்த விட்டு..
பனி விழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்..
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்..
காதலின்தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க..
போன்ற பாடல்களை
கூறுகளாக்கிப் பார்த்தால்
பாடகர் பாடுகையில்
இசை மனதை மயக்கும்..
சரணங்களுக்கு இடையே வரும்
இடை இசை உயிரை உருக்கும்..
ஒரு சில வினாடிகள் மெதுவாக
இசைக்கருவிகளின் இசைகளை
முட்டச் செய்து மோதச் செய்து
ராகத்தை தாளம்.. தாளத்தை
ராகம் தேடுவது போல்
தோன்றச் செய்து பின்பு
ஒழுங்கான இசைக்கு
புலி பதுங்கி பாய்வது போல்
வீறு கொண்டு தாவுவது
இளையராஜாவின் ஸ்டைல்
அது ரொம்பவே ஸ்பெஷல்..
ஆயிரம் தாமரை மொட்டுக்களே..
ஆனந்தக் கும்மிகள்
கொட்டுங்களேன்.. பாடலின்
ஆரம்பம் இதற்கு உதாரணம்..
இது உலகத்தில் வேறு.. எந்த
இசையமைப்பாளரும் செய்யாதது..
இளையராஜாவின் வெற்றி
இங்கேதான் இருக்கிறது..
பஞ்சு அருணாச்சலம்
இளையராஜா எனும் முத்துக்களே
இங்கு முத்துக் குளித்தன..
ஒன்றை ஒன்று கண்டெடுக்க..
உதயமானது முடிவில்லா
இசை சாம்ராஜ்யம்...
இனி பூமி உள்ளளவும்
உள்ளங்கள் கொள்ளை போகும்..
இளையராஜாவின் ஆரம்ப கால
பாடல்கள் கேட்ட பலர்
அவரின் புதிய பாடல்கள்
கேட்கும் முன்னர் மண்ணை
விட்டு மறைந்திருப்பர்..
அவரின் பழைய பாடல்கள்
உதயமான பின்பு
நிறைய பேர் பிறந்திருப்பர்..
அறுபதைத் தாண்டும்
நாங்கள் மட்டும்
அவரின் முதல் பாடல் முதல்
இன்றைய பாடல் வரை
அத்தனை பாடல்களையும்
இசைத்த உடன் கேட்டு
கேட்டு மகிழ்ந்தவர்கள்..
இதயங்கள் நனைந்து
நனைந்து சிலிர்த்தவர்கள்..
"பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடம் தானறியேன்"
சிந்து பைரவி..
"நாத வினோதங்கள்
நடன சந்தோசங்கள்"
சலங்கை ஒலி..
"ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க"
முதல் மரியாதை
படப் பாடல்கள்
சரிகமபதநி சப்த ஸ்வரங்கள்
தெரியாத சாமானியனுக்கும்
இசையை சொல்லிக் கொடுக்கும்..
இசைக்கு யாமிருக்க பயமேன்
என்று சொல்லி பாடல்கள்
கேட்பவனை அரவணைக்கும்..
இசைக்குள் வார்த்தைகளை
வார்த்தைகளுக்குள் இசையை
கோர்த்து மனங்களை
கட்டிப் போடுவது ராஜாவுக்கு
அத்துப்படி.. இதை இங்கு
சொல்லியாக வேண்டும்
உள்ளது உள்ளபடி..
இவரின் பாடல்கள்
சுகங்களைக் கொண்டாடும்
சோகங்களைத் துண்டாடும்...
அன்னக்கிளி...
பதினாறு வயதினிலே.. திரைப்
படங்களின் கிராமிய இசை
கேட்பவர்களை கிராமங்களுக்கு
சுற்றுலா அழைத்துச் சென்றது..
கிராமத்து வாழ்வின் அழகை
அழகாய்ச் சொன்னது...
தூர தேசங்களில் உள்ளவர்கள்
துட்டு இல்லாமல்
விடுமுறை எடுக்காமல்
அவரவர் கிராமங்களுக்கு
மனதால் வந்து போனார்கள்..
சுத்தச் சம்பா பச்ச நெல்லு
குத்தத்தான் வேணும்..
முத்து முத்தா பச்சரிசி
அள்ளத்தான் வேணும்
பாடல் கேட்கும் போதெல்லாம்
கல்யாண வீட்டில் உறவுகள்
நட்புகளுடன் அமர்ந்து பேசி
கல்யாண வேலைகள் செய்து
உணவு உண்டு சந்தோசித்த
திருப்தி வந்து போனது..
கிராமத்து வாழ்க்கையின்
அர்த்தங்கள் கூடியது..
கிராமியப் பாடல்கள்..
மண்ணில் வேலை செய்பவன் மீது
மலர்கள் தூவிச் செல்லும்..
பொன்னில் வேலை செய்பவனை
நலன்கள் விசாரித்துப் போகும்..
கிராமிய மணம் மாறாமல்
மனதை மயக்கும் பாடல்கள்
கொடுக்க புதிய இசையமைப்பாளர்
வந்து விட்டார் என்று
இசைஞானி இளையராஜாவை
மக்கள் கொண்டாடிய போது
கர்நாடக மேற்கத்திய இசையிலும்
உச்சம் தொடும் பாடல்கள்
அவரிடம் உதயமானது கண்டு
மனசு சொக்கிப் போனார்கள்..
இசைஞானி இளையராஜா
உன்னால் இசை உலகம்
பெற்றது இன்னும் உயரம்...
என்னுயிர் நீதானே
உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே
இன்பம் காண்போமே..
ஹேய்... பாடல் ஒன்று
ராகம் ஒன்று சேரும் போது
அந்த கீதம் அதை மீண்டும்
மீண்டும் கேட்கத் தோன்றும்..
மின்மினிக்கு கண்ணில்
ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகு பெண்ணே..
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..
பல ராக தாளங்களில் நீ
தந்த இசையின் ஆழ அகலம்
அது மிகவும் வசீகரம்..
இளையராஜா என்னும் சிலை
தன்னை வடித்த சிற்பிகளுடன்
தானும் சேர்ந்து தன்னை
அழகாய் வடித்துக் கொண்டது
எல்லோரும் விரும்பும் வண்ணம்..
துப்பார்க்குத் துப்பாய
துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இளையராஜா திருக்குறள்
வாசிக்கும்போது காதல் பாட்டு
ஒன்று அவரிடம் கேட்டார்கள்..
அவர் அதற்கு..
பேர் வச்சாலும் வைக்காம
போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்..
உடனே பாட்டு தந்தார்
காதல் ரசம் சொட்ட.. சொட்ட..
இசைஞானியிடம் இசை
எப்போது கேட்டாலும் வரும்..
இசையில் அவர் ஒரு
அட்சய பாத்திரம்... நிலைத்து
நிற்கும் அவரது சரித்திரம்..
"ராக்கம்மா கையத்தட்டு"
என்ற ராஜாவின் பாடல்
இசையை ரசிக்கும்
அத்தனை பேரிடமும்
கை தட்டல் வாங்கியது...
இளையநிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
பாடல் முழுவதும் வந்து போகும்
கித்தார் இனிமையாய் பாடலை
முடித்து வைக்கும்.. மனதில்
பரவசத்தை துவக்கி வைக்கும்..
இந்தப் பாடலில் கிட்டார்
நளினங்கள் பேசும்.. மனதில்
ஓவியங்கள் வரையும்..
நடனங்கள் புரியும்.. விரல்கள்
மீட்டும் கிட்டார் நரம்புகள்
இதயங்களை மீட்டும் இனிதாய்..
இந்த ஒலிச் சுற்றுகளின்
வினாடிகளுக்குள் ஹெர்ட்ஸ்
வைப்ரேஷன் வரலாறு..
இது ஈடு இணை இல்லாதது..
கவிக்குயில் திரைப்படம்..
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை..
பாடலில் ராக தேசத்தை
ஆளும் புல்லாங்குழல்
இசை கேட்டவர்கள்..
மூங்கில் காடுகளுக்கு
முதல் மரியாதை செய்வார்கள்..
காதுகளில் தேன் பாயும்
கருவி கொடுத்ததற்காக..
பண்ணைப்புரத்து பெருமிதம்
தமிழகத்தின் அற்புதம்
இந்திய தேசத்தின்
இன்னொரு இதிகாசம்
இளையராஜாவின்
இசை ராஜாங்கம்
நூற்றாண்டுகள் தாண்டியும்
நிலைத்து நிற்கும்...
எங்கும் இசை.. எதிலும் இசை
என வாழ்ந்து காட்டும்
இசைச் செல்வம் ராஜா.. நீ
எமக்குத் தரும் பாடல்கள்
செல்வத்துட் செல்வஞ்
செவிச்செல்வம்.. வரிகள்
பாடப் படுவதற்கு முன்பே உன்
இசை தரும் அதன் முகவரிகள்..
மொட்டுக்கள் பூக்கும் நேரத்தில்
மெட்டுக்கள் நீ போட்டதால்
ஒரு திரைப் படத்திற்கு ஓரிரு
நாட்களில் பின்னணிக்கும்
பாடல்களுக்கும் உனது
இசை சாத்தியமானது..
தங்கச் சுரங்கத்தில்
கிடைக்கும் தாதுக்களை
பக்குவம் செய்தால் தான்
பொன் கிடைக்கும்..
உன் இதயச் சுரங்கத்தில்
உதயமாகும் பாட்டுகள் அப்படியே
மனங்களை அழகு படுத்தும்
ஆபரணங்களாய்ச் ஜொலிக்கும்..
ஆயிரம் திரைப்படங்கள்
ஏழாயிரம் பாடல்கள்.. இவை
கேட்டுக் கிடைத்த வரம்..
நீ செய்யும் இசைத் தவத்தில்
ஹவ் டு நேம் இட்
நத்திங் பட் வின்ட்
ராஜாவின் ரமண மாலை
இளையராஜாவின் கீதாஞ்சலி
இது போன்ற இன்னும் பல
இசைத் தொகுப்புகளும்
மாணிக்க வாசகரின்
திருவாசகத்திற்கு தெய்வீக அருள்
இசையும் எங்களுக்கு
கேட்காமல் கிடைத்த வரம்..
இளையராஜாவின் பாடல்கள்
ரசிகர்களிடம் காதைக் கொடு
என்றன காலக் கெடு
ஏதும் இல்லாமல்..
ஈர்க்கும் இசையைக் கொடுத்து
ஒட்டுமொத்த தமிழகத்தின்
காற்றைக் குத்தகைக்கு எடுத்த
இசைஞானி இளையராஜா
இசையில் உச்சம் புகழில் உச்சம்
கட்டுப்பாட்டில் மட்டும்
அதே பண்ணைப்புரம்..
இந்தியா இரண்டு மூன்று
வல்லரசுகளை விழுங்கலாம்..
விரைவில் ஒரு வல்லரசு ஆகலாம்..
திறமை அர்ப்பணிப்பு ஈடுபாட்டுடன்
இளையராஜா போடும் உழைப்பு..
அவரவர் வேலைகளில்
மக்கள் அனைவரும் கொடுத்தால்..
பத்ம பூஷன்.. இந்தியாவின்
இரண்டாவது பெரிய விருது
பத்ம விபூஷன் விருதுகள்
இவர் பெற்றதால் விருதுகள்
பெற்றன பெருமை...
நான்கு தடவை இவரது
திரைப் படங்களுக்கு
தேசிய விருது.. அது தமிழுக்கு
இன்னொரு பெருமை...
ஏ.ஐ... தொழில்நுட்பம்
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்
எத்தனை காலம் ஆனாலும்
உன் நேச்சுரல் இன்டலிஜென்சை
நெருங்க இயலாது.. இதற்கு
உன் இளமைக் காலங்களில்
கரம் கோர்த்தவர்கள்
சுரம் சேர்த்தவர்கள்
உன் இனிய சகோதரர்கள்
பாவலர் வரதராஜன்...
ஆர் டி பாஸ்கர்.. கங்கை அமரன்..
ஒரே கருவறையில் உதித்து
ஒரே வானில் ஜொலித்த
இசைச் சந்திரர்கள்..
இவர்களின் ஒற்றுமையில்
பத்தும் பத்தும் இருபதல்ல
அதற்கும் மேல் என்பதை
புரிய வைத்தவர்கள்..
இசைக்கும்போது ஈர்க்க வைத்த நீ
பாடும்போது மயக்க வைத்தாயே
உன் குரலின் அடர்த்தி
அது இதயங்களை
ஈர்க்கும் காந்தத்தின் நேர்த்தி
பக்தியும் காதலும் ஒன்றுக்கொன்று
தொடர்புடையது என்று சொல்லும்..
இதய சிம்மாசனங்களில்
ஏறி எளிதாக அமரும்...
நிலநடுக்கம் அதன் அதிர்வெண்ணும்
கட்டிடங்களின் அதிர்வெண்ணும்
ஒன்றாய் இருந்து
ஒன்று சேர்கையில்
கட்டிடங்கள் உடைந்து போகும்..
ஆனால் உன் பாட்டுக்களின்
அதிர்வும் ரசிகர்களின்
ரசனையின் அதிர்வும்
ஒன்று சேர்கையில்
உற்சாகம் புரளும்..
கொண்டாடி மகிழும்..
ஊர் கூடி தேர் இழுக்கும்..
கல்யாணப் பட்டு.. அது
அடிக்கடி கட்டாமல்
எப்போதும் புதிதாகவே இருக்கும்..
இளையராஜாவின் பாட்டு
அடிக்கடி கேட்டு ரசித்தும்
என்றும் புதிதாகவே இருக்கும்...
கவிதைகளை முத்தமிட்டவர்கள்
கவிதைகளை முத்தமிட
வைத்தவர்கள்.. கவிஞர்கள்
கண்ணதாசன்.. வாலி.. வைரமுத்து..
பாடல்கள் ராஜாவின் இசையெனும்
இமயத்தோடு இணைந்த
முப்பெரும் நதிகள்...
கவிஞர் கண்ணதாசனின் கடைசிப்
பாட்டும் கவிஞர் வைரமுத்துவின்
முதல் பாட்டும் ராஜாவின்
இசையில் சங்கமித்தவை..
ரசிகர்களின் தேசத்தில்
சங்கம் வைத்தவை...
பாரதிராஜா.. இளையராஜா
வைரமுத்து.. எஸ்பிபி.. ஜானகி
கூட்டணி.. பாட்டுத் தேர்தல்கள்
அனைத்திலும் ஏகோபித்த
ஆதரவில் வெற்றி பெற்றது..
டி.எம்.எஸ்.. சுசிலா.. பாலமுரளி
ஜானகி.. ஜேசுதாஸ்.. எஸ்.பி.பி..
வாசுதேவன்..சைலஜா.. சித்ரா..
மனோ.. சுவர்ணலதா.. ஜென்சி
குரல்கள் பலாச்சுளைகள்..
உன் இசை எனும் தேனில் ஊறி
இன்பத்தை வாரி வழங்கின..
மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதன்
அவர்களைக் கொண்டாடிய அரசு
விழாவில் எம்.எஸ்.வி அவர்களை
நீ பாராட்டிப் பேசிய விதம் சொல்லும்
கர்வத்தில் நீ கடல் நீர் மட்டம்..
அது பூஜ்யம் லெவல்.. பூஜ்யம்
என்பதே ஒரு உயரம்.. இதில்
மற்றவருக்கு ஏன் துயரம்..
பழைய பாடல்கள்.. புதிய
பாடல்கள் என பாடல்களை
வேறுபடுத்தும் வழக்கம்
இளையராஜா பாடல்களுக்கு
இல்லை.. இன்னொரு முறை
கேட்கத் தோன்றும் எந்தப் பாடலும்
இங்கு பழைய பாடல் இல்லை..
மணிக் கணக்கில்
பேசி மகிழ்ந்த பிறகும்
ட்ரெயின் வந்து புறப்பட்டு
செல்லும் அந்த சில நொடிகளும்
ட்ரெயின் கூடவே ஓடி முகம் பார்த்து
கை காட்டிப் புன்னகைப்பது
அன்புக்கும் மேலே ஏதோ ஒன்று..
அந்த அற்புத அன்புக்கு
இன்னும் பெயரிடப்படவில்லை...
இசைஞானி இளையராஜாவின்
பாடல்கள் எத்தனை முறை
கேட்டாலும் இன்னும் இன்னும்
கேட்கத் தோன்றும்..
இந்த ரசனைக்கும் இன்னும்
பெயரிடப் படவில்லை..
பாடல்களில்
இளமை வைத்தாய்...
இனிமை வைத்தாய்...
புதுமை வைத்தாய்.. என்றும்
இது மாறாது நிலைக்கும்
சூட்சுமம் வைத்தாய்..
இசை தீர்க்கதரிசி.. இசைஞானி
இளையராஜா அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
இசைஞானி இளையராஜா
இன்னும் நீ வாழப் போகும்
பல ஆண்டுகள்
பூமி எமக்கு கொடுக்கும் வரம்..
அதில் நீ இசைக்கப்
போகும் பாடல்கள்
நீ பூமிக்கு கொடுக்கும் வரம்..
அன்புடன்..
ஆர் சுந்தரராஜன்.
❤️😍👍🌹