388 புகழும் நாடாது செய்வதே புண்ணியம் - கைம்மாறு கருதா உதவி 6
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
பிறர்புக ழினைக்கைம் மாற்றைப்
..பேணியே யுதவி செய்வோர்
அறமுளா ரல்லர் நித்தன்
..அருட்குமே யருக ரல்லர்
திறவலக் கரஞ்செய் நன்றைத்
..திகழிடக் கரங்கா ணாமல்
வறியர்பாத் திரம றிந்து
..வழங்குவோர் மாட்சி யோரே. 6
- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரஈ;
”பிறர் புகழ்வதையோ, பிறரது பிரதி உபகாரத்தை எதிர்பார்த்தோ நன்மை செய்வோர் அறவோர் ஆகமாட்டார். அழியா ஆண்டவன் அருட்கும் தகுதியில்லாதவர்.
சிறந்த வலது கை செய்யும் அறத்தை விளங்கும் இடது கை அறியாதபடி ஏழைகட்கு தகுதியறிந்து கைம்மாறு கருதாது கொடுப்பவரே உயர்ந்தோ ராவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
அறம் - நன்மை. நித்தன் - அழிவில்லாதவன். பாத்திரம் – தகுதி வழங்குதல் - கைம்மாறு கருதாது கொடுத்தல். மாட்சியோர் - உயர்ந்தோர்.

