335 இழிந்தாரைச் சேரின் இழிவு என்றும் நீங்காது - தீயரைச் சேராமை 4
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
மணமனை சேர்மண மாலை மாண்புறும்
பிணவனத் தாரிழி வெய்தும் பெற்றியார்
கணமதிற் சேர்ந்தவர் கனங்கொண் டோங்குவர்
குணமிலா ரினமுறல் குறையுண் டாக்குமே. 4
- தீயரைச் சேராமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
“கல்யாண வீட்டைச் சேர்ந்த மணமுள்ள பூமாலை சிறப்படையும். அம்மாலை சுடுகாட்டைச் சேர்ந்தால் மிக்க இழிவடையும்.
நல்ல தன்மையையுடைய பெரியவர் கூட்டத்தில் சேர்ந்தவர் பெருமை பெற்று உயர்வர். நல்ல பண்பில்லாதவர் கூட்டத்தைச் சேர்ந்தால், இழிவையுண்டாக்கும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
பிணவனம் - சுடுகாடு. பெற்றியார் - பெரியவர். கணம் - கூட்டம். கனம் - பெருமை. குணமிலார்- நல்ல பண்பில்லாதவர். இனம் - கூட்டம். குறை - இழிவு.